திருவண்ணாமலை

குடிநீர் பிரச்னை: கிராம மக்கள் சாலை மறியல்

30th Jul 2019 07:21 AM

ADVERTISEMENT

செய்யாறு அருகே குடிநீர் கோரி கிராம மக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
செய்யாறு ஊராட்சி ஒன்றியம், எறையூர் கிராமத்தில்  2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்தக் கிராமத்தில் கடந்த 6 மாதங்களாக சரிவர குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லையாம். 
 இதுகுறித்து  கிராம மக்கள் ஊராட்சிச் செயலர், மேல்நிலை குடிநீர்த் தேக்கத் தொட்டி இயக்குபவரிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம் .
மேலும், கடந்த இரு வாரங்களாக 3 இடங்களில் குடிநீர்த் தொட்டிகளின் மின் மோட்டார் பழுதாகியுள்ளது. அதனால் கிராம மக்கள் குடிநீர் கிடைக்காமல் பெரும் அவதிக்குள்ளாகினர்.  இதனால், ஆத்திரமடைந்த அவர்கள் செய்யாறு - கொருக்கை சாலையில் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். 
தகவல் அறிந்த அனக்காவூர் காவல் உதவி ஆய்வாளர் ராஜ்ஜெய்குமார், செய்யாறு வட்டார வளர்சசி அலுவலர் மூர்த்தி மற்றும் போலீஸார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். 
பின்னர், ஊராட்சிச் செயலர் வெங்கடேசனிடம் உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கும்படி வட்டார வளர்ச்சி அலுவலர் உத்தரவிட்டார். இதையடுத்து, பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியலால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT