திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள முருகன் கோயில்களில் ஆடி கிருத்திகை விழா வெள்ளிக்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
திருவண்ணாமலையை அடுத்த நா.புதூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீசக்திவேல் சாந்த முருகன் கோயிலில் 47-ஆவது ஆண்டாக ஆடி கிருத்திகை விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி, காலையில் 108 பால்குட ஊர்வலம், முருகப்பெருமானுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றன. தொடர்ந்து, பக்தர்கள் மார்பு மீது உரலை வைத்து மஞ்சள் இடித்தும், மிளகாய் தூளை உடம்பில் பூசிக்கொண்டும், செக்கு இழுத்தும், கொதிக்கும் எண்ணெயில் கையால் வடை சுட்டும் நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர், 108 பக்தர்கள் முதுகில் அலகு குத்திக்கொண்டு தேர் இழுத்தனர். இதில், திரளான பொதுமக்கள் கலந்துகொண்டு முருகப்பெருமானை வழிபட்டனர்.
தொடர்ந்து, சனிக்கிழமை (ஜூலை 27) இரவு 7 மணிக்கு இடும்பன் பூஜையும், 9 மணிக்கு வாழவச்சனூர் அண்ணாமலையார் நாடக சபாவின் தெருக்கூத்து நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன. ஏற்பாடுகளை கோயில் தர்மகர்த்தா ராஜேந்திரன், என்.செல்வராஜ் மற்றும் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.
கோணலூர் முருகன் கோயிலில் நடைபெற்ற ஆடி கிருத்திகை விழாவையொட்டி, மூலவருக்கு பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. மேலும், பக்தர்கள் பல்வேறு நேர்த்திக்கடன் செலுத்தினர். ஏற்பாடுகளை கோயில் தர்மகர்த்தா ஆர்.ராஜாகண்ணு, பி.ராமச்சந்திரன், எஸ்.சுப்பிரமணி, ஆர்.குமார் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
இதேபோல, போளூரை அடுத்த காங்கேயனூர் கிராமத்தில் அமைந்துள்ள வள்ளி, தெய்வானை சமேத சிவசுப்ரமணியர் கோயில் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள முருகன் கோயில்களில் ஆடி கிருத்திகை விழா கோலாகலமாக நடைபெற்றது.