செய்யாறு அருகே மின்சாரம் பாய்ந்ததில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
செய்யாறை அடுத்த அழிஞ்சல்பட்டு கிராமம் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த பழனி மனைவி அஞ்சலை (40). இவர், கடந்த 21-ஆம் தேதி குளிப்பதற்காக தண்ணீரில் அதை சூடுபடுத்தும் சாதனத்தை (ஹீட்டர்) போட்டுள்ளார். பின்னர், தண்ணீர் சூடாகிவிட்டதா என பார்ப்பதற்காக சுவிட்சை நிறுத்தாமல் அஞ்சலை கை வைத்தாராம்.
இதனால் அவரது உடலில் மின்சாரம் பாய்ந்தது. அப்போது, அஞ்சலையை அவரது உறவினரான பாலகிருஷ்ணன் காப்பாற்ற முயன்றபோது, அவரது உடலிலும் மின்சாரம் பாய்ந்தது. இதனால், மயக்கமடைந்த இருவரையும் உறவினர்கள் மீட்டு, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர், இருவரும் தீவிர சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், அங்கு அஞ்சலை உயிரிழந்தார். இதுகுறித்து தூசி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.