திருவண்ணாமலை

தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட 3 சகோதரர்கள் குடும்பத்துக்கு பசுமை வீடு: பணியை ஆட்சியர் தொடக்கிவைத்தார்

27th Jul 2019 10:10 AM

ADVERTISEMENT

கலசப்பாக்கம் வட்டம், காம்பட்டு கிராமத்தில்  தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட 3 சகோதரர்கள் குடும்பத்துக்கு பசுமை வீடு கட்டும் பணியை மாவட்ட ஆட்சியர் தொடக்கிவைத்தார்.
காம்பட்டு கிராமம் காமராஜர் நகரில் வசித்து வருபவர்கள் ஏழுமலை (45) - ஜெயசாந்தி (38) தம்பதியர். இவர்கள் தங்களுக்குச் சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து குடும்பம் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு சிவக்குமார் (18), செல்வம் (16), நந்தகோபால் (13) ஆகிய மகன்கள் உள்ளனர். இவர்களில் சிவக்குமார் 7-ஆம் வகுப்பு படிக்கும்போதும், செல்வம் 6-ஆம் வகுப்பு படிக்கும்போதும், நந்தகோபால் 5-ஆம் வகுப்பு படிக்கும்போதும் தசை சிதைவு நோயால் முற்றிலும் பாதிக்கப்பட்டு நடக்க முடியாமல் வீட்டிலேயே இருந்த நிலையில் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் மூவருக்கும் அரசு மூலம் மாற்றுத் திறனாளிகளுக்காக வழங்கப்படும் நிதியுதவி தலா ரூ.1,500 மாதந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இவர்களின் நிலையை அறிந்த மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி, வியாழக்கிழமை காம்பட்டு கிராமத்துக்கு நேரில் சென்று தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட சகோதரர்கள் மூவரும் வசித்து வரும் பழைய வீட்டுக்குப் பதிலாக, அவர்களுக்குச் சொந்தமான இடத்தில் தமிழக அரசின் பசுமை வீடு திட்டத்தின் கீழ், புதிய வீடு கட்டுவதற்கான பணியை தொடக்கிவைத்தார்.
மேலும், அவர்களின் குடும்ப வருமானத்துக்காக 2 கறவை பசுக்கள், 2 கன்றுக் குட்டிகளையும் ஆட்சியர் வழங்கினார். இவை மட்டும் அல்லாமல், மூன்று சகோதரர்களுக்கும் நீர் படுக்கையுடன் கூடிய புதிய கட்டில்கள், மாற்றுத் திறனாளிகள் நலத் துறை மூலமாக பேட்டரியால் இயக்கப்படும் 3 சக்கர நாற்காலிகள் ஆகியவற்றை வழங்கினார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT