ஆணவப் படுகொலையைக் கண்டித்து, திருவண்ணாமலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை அண்ணா சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, மாநில செய்தித் தொடர்பாளர் கு.கா.பாவலர் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர்கள் பி.கா.அம்பேத்வளவன், பு.செல்வம், ம.கு.பகலவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருவண்ணாமலை தொகுதிச் செயலர் நியூட்டன் வரவேற்றார்.
இதில், தமிழகத்தில் தொடரும் சாதிய ஆணவப் படுகொலைகளைக் கண்டித்தும், அவற்றைத் தடுக்க மத்திய - மாநில அரசுகள் தனிச் சட்டம் இயற்றக் கோரியும் முழக்கங்களை எழுப்பினர்.
கல்வி, பொருளாதார இயக்க மாநிலச் செயலர் வழக்குரைஞர் க.மோகன், மாவட்ட செய்தித் தொடர்பாளர்கள் பெ.சாரதி, ஜெ.சங்கதமிழன் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். நகரச் செயலர் தேவா (எ) தேவேந்திரன் நன்றி கூறினார்.