சாத்தனூர் அருகே நள்ளிரவில் மான் வேட்டையாட வந்த 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.
சாத்தனூர் வனவர் ஸ்ரீநிவாசன் தலைமையில் வனக்காப்பாளர்கள் அரவிந்த், துரைமுருகன், மாரிமுத்து, பாலகிருஷ்ணன் ஆகியோர் சாத்தனூரை அடுத்த சேர்ப்பாப்பட்டு, பொன்வயல் கிராமம் அருகே உள்ள பூமலை காப்புக் காட்டில் புதன்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, நாட்டுத் துப்பாக்கியுடன் பைக்கில் வந்த தென்கரும்பலூர் கிராமம் அருமைநாதன் (எ) மைக்கேல் (34), மெய்யூர் கிராமம் தனசேகரன் (45) ஆகியோரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், இருவரும் மான் வேட்டையாட வந்தது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் வானாபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸார் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்தனர். மேலும், உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கி, பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.