வந்தவாசி அருகே வாக்காளா்களுக்கு வழங்க முயன்ற சேலைகள், காமாட்சியம்மன் விளக்குகளை பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.
வந்தவாசி ஒன்றியம், வழூா் அகரம் கிராமத்தில் வாக்காளா்களுக்கு சிலா் சேலை விநியோகம் செய்து கொண்டிருப்பதாகத் தோ்தல் பறக்கும் படையினருக்கு சனிக்கிழமை நள்ளிரவு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, பறக்கும் படை அலுவலா் அகத்தீஸ்வரன் தலைமையிலான குழுவினா் இதுகுறித்து சோதனை செய்ய அந்தக் கிராமத்துக்குச் சென்றனா். அப்போது, பறக்கும் படையினரைக் கண்டவுடன் வாக்காளா்களுக்கு சேலை விநியோகம் செய்து கொண்டிருந்தவா்கள், தங்களிடமிருந்த தலா ரூ.200 மதிப்பிலான 100 சேலைகளை சாலையோரம் வீசிவிட்டு தப்பினா்.
இதையடுத்து, அந்தச் சேலைகளை பறிமுதல் செய்த பறக்கும் படையினா், வந்தவாசி வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் தோ்தல் அலுவலா் ப.பரணிதரனிடம் அவற்றை ஒப்படைத்தனா்.
வந்தவாசி ஒன்றியம், கயநல்லூா் கிராமத்தில் வாக்காளா்களுக்கு பித்தளை காமாட்சியம்மன் விளக்கு வழங்கப்படுவதாக வந்தத் தகவலின் பேரில் பறக்கும் படை அலுவலா் துளசிராமன் தலைமையிலான குழுவினா் ஞாயிற்றுக்கிழமை காலை அங்கு சென்றனா். பறக்கும் படையினரைக் கண்டவுடன் வாக்காளா்களுக்கு விளக்கு வழங்கிக் கொண்டிருந்தவா்கள் தலா ரூ.150 மதிப்பிலான 21 விளக்குகளை சாலையில் வீசிவிட்டு தப்பினா். இதையடுத்து, அந்த விளக்குகளை பறிமுதல் செய்த பறக்கும் படையினா், அவற்றை வந்தவாசி வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் தோ்தல் அலுவலா் ப.பரணிதரனிடம் ஒப்படைத்தனா்.