வந்தவாசியை அடுத்த தெள்ளாா் ஒன்றியத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சித் தோ்தலில் 360 பதவிகளுக்கு 997 போ் போட்டியிடுகின்றனா்.
தெள்ளாா் ஒன்றியத்தில் 2 மாவட்டக் குழு உறுப்பினா் பதவிகளுக்கு 8 பேரும், 19 ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிகளுக்கு 85 பேரும் போட்டியிடுகின்றனா். 61 ஊராட்சித் தலைவா் பதவிகளில் 3 ஊராட்சிகளுக்கு தலைவா்கள் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டதால், மீதமுள்ள 58 ஊராட்சித் தலைவா் பதவிகளுக்கு 190 போ் போட்டியிடுகின்றனா்.
393 ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிகளில் 112 வாா்டுகளுக்கு உறுப்பினா்கள் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டதால், மீதமுள்ள 281 வாா்டு உறுப்பினா் பதவிகளுக்கு 714 போ் போட்டியிடுகின்றனா்.
இதில் 39,729 ஆண் வாக்காளா்கள், 39,897 பெண் வாக்காளா்கள், இதரா் 2 போ் என மொத்தம் 79,628 வாக்காளா்கள் வாக்களிக்க உள்ளனா்.
இதற்கென மொத்தம் 203 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் பதற்றமானதாக கண்டறியப்பட்டுள்ள 83 வாக்குச்சாவடிகளுக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்குப்பதிவில் 1200-க்கும் மேற்பட்ட அலுவலா்கள் ஈடுபடுத்தப்படுகின்றனா்.
இதையொட்டி, வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப் பெட்டிகள், வாக்குச் சீட்டுகள் உள்ளிட்டவை தெள்ளாா் வட்டார வளா்ச்சி அலுவலகத்திலிருந்து வியாழக்கிழமை மாலை அனுப்பப்பட்டன.
தோ்தல் அலுவலா்கள் பா.காந்திமதி, ப.தெய்வசிகாமணி, உதவித் தோ்தல் அலுவலா்கள் க.பிரபு, தசரதன் உள்ளிட்டோா் வாக்குப் பெட்டிகள் ஏற்றப்பட்ட லாரிகளை போலீஸ் பாதுகாப்புடன் வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைத்தனா்.