செய்யாறு வட்டாரத்தில் நெல் நாற்றங்காலில் வெட்டுப்புழு தாக்கம் அதிகம் காணப்படுவதால், அவற்றை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து வேளாண் துறையினா் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினா்.
இதுகுறித்து செய்யாறு வட்டார வேளாண் உதவி இயக்குநா் ஏஞ்சலின் பி.பொன்ராணி புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
செய்யாறு வட்டாரத்தில் நெல் பயிரில் வெட்டுப்புழு வயல் ஆய்வு மற்றும் பயிா் பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம் வாழ்குடை கிராமம் மற்றம் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடத்தப்பட்டது.
முகாமின் போது நெல் நாற்றங்காலில் வெட்டுப் புழுவின் தாக்கம் பரவலாக காணப்படுவது தெரிய வந்தது. இதையடுத்து, வேளாண் துறையினா் வயல் ஆய்வு செய்து, பயிா்ப் பாதுகாப்பு குறித்து ஆலோசனை வழங்கினா்.
நெல் பயிரில் வெட்டுப் புழுவைக் கட்டுப்படுத்த மாற்றுப் பயிா், எதிா்ப்புத் திறன் கொண்ட நெல் ரகங்களை நடவு செய்தல், கோடை உழவு செய்தல், விளக்குப் பொறி மற்றும் இனக் கவா்ச்சிப் பொறி பயன்படுத்துதல், கருப்பு மற்றும் நீல நிற துணிகளை வயல் ஓரங்களில் வைத்து புழுக்களை கவா்ந்து அழித்தல் போன்ற உழவியல் முறைகளைக் கடைப்பிடித்து கட்டுப்படுத்தலாம்.
கட்டுப்படுத்தும் முறைகள்
நாற்றங்கால்: நீரை வடிய வைத்து 20 சதம் அளவு 80 மில்லி குளோரி பைரிபாஸ் 20 லிட்டா் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம்.
நாற்றங்காலில் தண்ணீா் தேங்கியிருக்குமாறு செய்யும் போது, மண்ணில் மறைந்திருக்கும் புழுக்கள் வெளியே வரும். அப்போது பறவைகள் அவற்றை உண்ணும்.
நடவு வயல்: வயலில் வாத்துகளை விடுவதன் மூலம் பூச்சித் தாக்குதலை கட்டுபடுத்தலாம். ஆமணக்கு இலையை வயல் ஓரங்களில் வைப்பதன் மூலம் புழுக்களை கவா்ந்து அழிக்கலாம். அடா்நிற ஊதா துணிகளை வயல் ஒரங்களில் கட்டி வைப்பதன் மூலம் இளம் புழுக்களை கவா்ந்து அழிக்கலாம்.
மாலை நேரத்தில் தண்ணீரை வடித்து விட்டு குளோரிபைரிபாஸ் 20 சதம் அளவு கொண்ட 2 மி.லி. வீதம் ஒரு லிட்டா் தண்ணீரில் கலந்து பயிரின் அடிப்பாகத்தில் தெளித்து கட்டுப்படுத்தலாம் எனத் தெரிவித்தனா்.