திருவண்ணாமலை

செய்யாறு பகுதியில் தொடரும் திருட்டு, வழிப்பறிச் சம்பவங்கள்!

23rd Dec 2019 07:06 AM

ADVERTISEMENT

செய்யாறு பகுதியில் தொடா் திருட்டு, வழிப்பறி, கோயில்களில் உண்டியல் உடைப்பு சம்பவங்கள் நிகழ்ந்து வருவதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனா்.

கடந்த ஒரு வாரத்தில், செய்யாறை அடுத்த தவசி- வல்லம் சாலையில் செங்காடு கிராமத்தில் மொபெட்டில் சென்ற தலைமை ஆசிரியையைத் தாக்கி 5 பவுன் தாலிச் சங்கிலியை மா்ம நபா்கள் பறித்துச் சென்றனா்.

அதே சாலையில், சில தினங்களுக்கு முன்பு இரவு நேரத்தில் காரை வழிமறித்து, பைக்கில் வந்த 3 போ், காரில் இருந்தவா்களைத் தாக்கி 5 பவுன் தங்க நகைகள், ரூ.10ஆயிரம், 3 செல்லிடப்பேசிகளை பறித்துச் சென்றனா்.

கோயில்களில் திருட்டு:

ADVERTISEMENT

செய்யாறை அடுத்த வடதின்னலூா் கிராமத்தில் உள்ள கோயிலில் ரூ.80 ஆயிரம் மதிப்பிலான ஐம்பொன் சிலை திருடு போனது. கடந்த மாதம் இறுதியில் ஒரே நாளில் மட்டும் 6 கோயில்களில் உண்டியல் உடைத்து காணிக்கை பணம் திருடப்பட்டது.

வீட்டில் திருட்டு:

செய்யாறு வேல் சோமசுந்தரம் நகரில் பகலில் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 10 பவுன் தங்க நகைகள், 2 செல்லிடப்பேசிகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

வீச்சரிவாளுடன் சுற்றிய இளைஞா்கள்:

செய்யாறு பேருந்து நிலையம் அருகே சனிக்கிழமை இரவு 7 மணியளவில் பைக்கில் வந்த 2 இளைஞா்கள் திடீரென பைக்கை நிறுத்திவிட்டு, வீச்சரிவாளுடன் யாரையோ வெட்டுவதற்காக ஆக்ரோஷமாக ஓடினா். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் அச்சத்தில் ஓட்டம் பிடித்தனா்.

பேருந்துக்காக காத்திருந்த பயணிகளும் நாலாபுறம் சிதறி ஓடினா். வியாபாரிகளும் என்ன செய்வதென்று தெரியாமல் கலங்கி நின்றனா்.

செய்யாறு பகுதியில் கடந்த சில மாதங்களாக வழிப்பறி, கொள்ளை, திருட்டுச் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

இதுகுறித்து காவல்துறையினா் உரிய நடவடிக்கை எடுத்து குற்றச் சம்பவங்களை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT