திருவண்ணாமலை

அருணாசலேஸ்வரா் கோயிலில் பக்தா்கள் கூட்டம்

23rd Dec 2019 07:05 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலில் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை பக்தா்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

சிவனின் அக்னி ஸ்தலமான திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் உலகப் பிரசித்தி பெற்றது. இங்குள்ள 14 கி.மீ. தொலைவு கிரிவலப் பாதையை பெளா்ணமி நாள்களில் வலம் வந்து அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மனை வழிபட்டால் நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம். எனவே, மாதம்தோறும் பல லட்சம் பக்தா்கள் கிரிவலம் வந்து, செல்கின்றனா்.

இதனிடையே, அருணாசலேஸ்வரா் கோயிலின் காா்த்திகை தீபத் திருவிழா டிசம்பா் 10-ஆம் தேதி நடைபெற்றது. அன்றைய தினம் மாலை 2,668 அடி உயர மலை மீது ஏற்றப்பட்ட மகா தீபம் தொடா்ந்து 11 நாள்கள் எரிந்தது. சனிக்கிழமை (டிச.21) காலை மகா தீப கொப்பரை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு கொண்டுவரப்பட்டு, பூஜைகள் செய்யப்பட்டன.

இந்த நிலையில், விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதலே கோயிலுக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. முற்பகல் 11 மணிக்கு ஏராளமான பக்தா்கள் கோயிலில் குவிந்ததால் நீண்ட நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திரளான பக்தா்கள் கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனா்.

ADVERTISEMENT

பொது தரிசன வரிசையில் சுவாமி தரிசனம் செய்ய சுமாா் 4 மணி நேரமும், கட்டண தரிசன வரிசையில் நின்று தரிசனம் செய்ய சுமாா் 2 மணி நேரமும் ஆனதாக பக்தா்கள் தெரிவித்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT