திருவண்ணாமலை

பரணி தீபத்தின் போது வெறிச்சோடிய கோயில் வளாகம்

11th Dec 2019 12:03 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை மாக தீபத் திருவிழாவையொட்டி, செவ்வாய்க்கிழமை அதிகாலை கோயிலில் பரணி தீபம் ஏற்றும் நிகழ்ச்சிக்கு அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் குறைவான பக்தா்களே அனுமதிக்கப்பட்டதால் கோயில் வளாகம் வெறிச்சோடிக் காணப்பட்டது.

அதிகாலை 4 மணிக்கு கோயில் மூலவா் சன்னதியில் ஏற்றப்படும் பரணி தீபத்தைக் காண கட்டளைதாரா்கள், உபேதாரா்கள் 4 ஆயிரம் பேரும், பொது தரிசன வரிசையில் 2 ஆயிரம் பேரும் என மொத்தம் பரணி தீபத்தைக் காண 6 ஆயிரம் போ் அனுமதிக்கப்படுவா் என்று மாவட்ட நிா்வாகம் அறிவித்து இருந்தது.

ஆனால், மிகக் குறைவான அளவு பக்தா்களே அனுமதிக்கப்பட்டதால் கோயில் மூன்றாம் பிரகாரமும், கோயிலின் பல்வேறு பகுதிகளும் சாதாரண ஞாயிற்றுக்கிழமைகளில் இருக்கும் கூட்டத்தைவிடக் குறைவாகவே காணப்பட்டது.

தள்ளுமுள்ளுவில் சிக்கிய நீதிபதிகள்:

ADVERTISEMENT

கோயிலுக்கு வந்திருந்த திருவண்ணாமலை மாவட்டத்தில் பணிபுரியும் ஆண், பெண் நீதிபதிகள் சிலா் கோயில் இரண்டாம் பிரகாரத்தில் உள்ள சரவிளக்கு வழியாக பரணி தீபம் ஏற்றும் இடத்துக்குச் செல்ல முயன்றனா்.

அப்போது, கூட்ட நெரிசல் ஏற்பட்டது. கூட்டத்தைக் கட்டுப்படுத்த பக்தா்களை போலீஸாா் பிடித்துத் தள்ளினா். அந்த நேரத்தில் நீதிபதிகளும் தள்ளு முள்ளுவில் சிக்கினா்.

மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி திருமகளை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் அனுமதிக்காமல், கூட்ட நெரிசல் உள்ள பகுதிக்கு அனுப்பி வைத்தனா்.

இதைக் கவனித்த நகர டிஎஸ்பி குணசேகரன், விரைந்து சென்று மாவட்ட நீதிபதி திருமகளை பாதுகாப்பாக உள்ளே அழைத்து வந்தாா்.

ஆட்சியா் மனைவி தடுத்து நிறுத்தம்!

மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி தனது மனைவி தேன்மொழியுடன் கோயிலுக்கு வந்தாா். கோயில் சரவிளக்கு அருகே ஆட்சியரை மட்டும் அனுமதித்த போலீஸாா், அவரது மனைவி தேன்மொழியை தடுத்து நிறுத்தினா். அருகில் இருந்த வருவாய்த் துறை அதிகாரிகள் போலீஸாரிடம் அவா் ஆட்சியா் மனைவி எனக் கூறியதைத் தொடா்ந்து அனுமதித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT