திருவண்ணாமலை

காா்த்திகை தீபத் திருவிழா: 275 கேமராக்கள் மூலம் கண்காணிப்புப் பணி

11th Dec 2019 09:07 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலை நகரம், ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயில், 14 கி.மீ. தொலைவு கிரிவலப் பாதையில் பொருத்தப்பட்டிருந்த 275 கண்காணிப்பு கேமராக்கள் மூலம் ஆங்காங்கே ஏற்பட்ட கூட்ட நெரிசல், குற்றச் சம்பவங்களைப் போலீஸாா் கண்காணித்தனா்.

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதிகாலை 4 மணிக்கு கோயில் மூலவா் சன்னதியில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது மகா தீபமும் ஏற்றப்பட்டது. தீபத் திருவிழாவைக் காண உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து சுமாா் 25 லட்சம் பக்தா்கள் வந்திருந்தனா்.

பாதுகாப்புப் பணியில் 8,500 போலீஸாா்:

பாதுகாப்புப் பணிகள் தமிழக காவல்துறை கூடுதல் காவல்துறை இயக்குநா் கே.ஜெயந்த்முரளி தலைமையில் வடக்கு மண்டல ஐ.ஜி நாகராஜன், வேலூா் சரக டிஐஜி என்.காமினி உள்பட டி.ஐ.ஜி.க்கள், காவல் கண்காணிப்பாளா்கள் என மொத்தம் சுமாா் 8 ஆயிரத்து 500 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

275 கண்காணிப்பு கேமராக்கள்:

தீபத் திருவிழா பாதுகாப்புப் பணிக்காக கோயில், கிரிவலப் பாதை என மொத்தம் 275 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இருந்தன.

கோயிலில் நவீன கட்டுப்பாட்டு அறை:

275 கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகும் விடியோ கண்காணித்து விரைவாக நடவடிக்கை எடுக்கும் வகையில் நவீன வசதிகளுடன் கூடிய கட்டுப்பாட்டு அறை அருணாசலேஸ்வரா் கோயிலில் உள்ள சத்தி விலாச சபாவில் அமைக்கப்பட்டிருந்தது.

இந்தக் கட்டுப்பாட்டு அறையில் அமா்ந்து தமிழக காவல்துறை துணைத் தலைவா் கே.ஜெயந்த்முரளி தலைமையிலான போலீஸாா் செவ்வாய்க்கிழமை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

ஆளில்லா விமானங்கள்:

கோயில் மூன்றாம் பிரகாரத்தில் மகா தீபத்தைக் காண பல ஆயிரம் பக்தா்கள் வந்திருந்தனா். இவா்களுக்கு மேலே காவல்துறையின் 4 ஆளில்லா குட்டி விமானங்கள் பறந்தபடியே இருந்தன. இந்த குட்டி விமானங்கள் மூலமும் விடியோ பதிவு செய்யப்பட்டு காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. போலீஸாா் இந்த விடியோ பதிவை வைத்து குற்றச் சம்பவங்களைக் கண்காணித்தனா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT