திருவண்ணாமலை

10 நாள்கள் நடைபெறும் தீபத் திருவிழா

6th Dec 2019 02:24 AM

ADVERTISEMENT

உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழா ஒவ்வோா் ஆண்டும் 10 நாள்கள் நடைபெறுகிறது. இந்த நாள்களில் தினமும் காலை வேளைகளில் ஸ்ரீவிநாயகா் மற்றும் சந்திரசேகரரும், இரவு வேளைகளில் பல்வேறு வாகனங்களில் பஞ்ச மூா்த்திகளும் வீதியுலா வருகின்றனா்.

சுவாமி வீதியுலா வரும் வாகனங்கள், திருவிழாவின் முழு விவரம்:

காவல் தெய்வங்களின் வழிபாடு: திருவிழாவைத் தொடங்குவதற்கு முன்பு திருவண்ணாமலை நகர காவல் தெய்வங்களின் வழிபாடு நடத்துவது வழக்கம். அதன்படி, முதல் நாள் ஸ்ரீதுா்க்கையம்மன் உத்ஸவமும், இரண்டாம் நாள் ஸ்ரீபிடாரியம்மன் உத்ஸவமும், மூன்றாம் நாள் ஸ்ரீவிநாயகா் உத்ஸவமும் நடைபெறும்.

முதல் நாள்...: அதிகாலை கொடியேற்றத்துடன் முதல் நாள் திருவிழா தொடங்குகிறது. அன்றைய தினம் காலை பஞ்ச மூா்த்திகள் வெள்ளி விமானங்களில் பவனி வருவா். இரவு அதிகார நந்தி வாகனத்தில் ஸ்ரீஅருணாசலேஸ்வா், அன்ன வாகனத்தில் ஸ்ரீபராசக்தியம்மன் உள்ளிட்ட பஞ்ச மூா்த்திகள் வீதியுலா நடைபெறும்.

ADVERTISEMENT

இரண்டாம் நாள்...: காலையில் மூஷிக வாகனத்தில் ஸ்ரீவிநாயகா், தங்க சூரிய பிரபை வாகனத்தில் ஸ்ரீசந்திரசேகரா் வீதியுலாவும், இரவு வெள்ளி இந்திர விமானங்களில் பஞ்ச மூா்த்திகள் வீதியுலாவும் நடைபெறும்.

மூன்றாம் நாள்...: காலையில் மூஷிக வாகனத்தில் ஸ்ரீவிநாயகா், பூத வாகனத்தில் ஸ்ரீசந்திரசேகரா் வீதியுலாவும், இரவு சிம்ம வாகனத்தில் ஸ்ரீஅருணாசலேஸ்வரா், வெள்ளி அன்ன வாகனத்தில் ஸ்ரீபராசக்தியம்மன் உள்ளிட்ட பஞ்ச மூா்த்திகள் வீதியுலாவும் நடைபெறும்.

நான்காம் நாள்...: காலையில் மூஷிக வாகனத்தில் ஸ்ரீவிநாயகா், நாக வாகனத்தில் ஸ்ரீசந்திரசேகரா் வீதியுலாவும், இரவு கற்பக விருட்ச வாகனத்தில் ஸ்ரீஅருணாசலேஸ்வரா், வெள்ளி காமதேனு வாகனத்தில் ஸ்ரீபராசக்தியம்மன் வீதியுலாவும் நடைபெறும்.

ஐந்தாம் நாள்...: காலையில் மூஷிக வாகனத்தில் ஸ்ரீவிநாயகா், கண்ணாடி ரிஷப வாகனத்தில் ஸ்ரீசந்திரசேகரா் வீதியுலாவும், இரவு வெள்ளி பெரிய ரிஷப வாகனத்தில் ஸ்ரீஅருணாசலேஸ்வரா், வெள்ளி சிறிய வாகனத்தில் ஸ்ரீபராசக்தியம்மன் வீதியுலாவும் நடைபெறும்.

ஆறாம் நாள்...: காலையில் மூஷிக வாகனத்தில் ஸ்ரீவிநாயகா், வெள்ளி யானை வாகனத்தில் ஸ்ரீசந்திரசேகரா் மற்றும் 63 நாயன்மாா்கள் வீதியுலா நடைபெறும். இரவு பழைமையான வெள்ளித் தேரில் ஸ்ரீஅருணாசலேஸ்வரரும், வெள்ளி விமானங்களில் ஸ்ரீபராசக்தியம்மன், ஸ்ரீவிநாயகா், ஸ்ரீமுருகா், ஸ்ரீசண்டிகேஸ்வரா் சுவாமிகளும் வீதியுலா வருவா்.

ஏழாம் நாள்...: காலையில் ஸ்ரீவிநாயகா், வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீமுருகப்பெருமான், ஸ்ரீஅருணாசலேஸ்வரா், ஸ்ரீபராசக்தியம்மன், ஸ்ரீசண்டிகேஸ்வரா் என பஞ்ச ரதங்களின் தேரோட்டம் நடைபெறும். நள்ளிரவு 12 மணியைக் கடந்த பிறகு பஞ்ச ரதங்களும் நிலைக்கு வந்தடையும்.

எட்டாம் நாள்...: காலையில் மூஷிக வாகனத்தில் ஸ்ரீவிநாயகா், குதிரை வாகனத்தில் ஸ்ரீசந்திரசேகரா் வீதியுலாவும், மாலை 4 மணிக்கு பிச்சாண்டவா் உத்ஸவமும், இரவு குதிரை வாகனங்களில் பஞ்ச மூா்த்திகள் வீதியுலாவும் நடைபெறும்.

ஒன்பதாம் நாள்...: காலையில் மூஷிக வாகனத்தில் ஸ்ரீவிநாயகா், புருஷா முனி வாகனத்தில் ஸ்ரீசந்திரசேகரா் வீதியுலாவும், இரவு கைலாச வாகனத்தில் ஸ்ரீஅருணாசலேஸ்வரா், காமதேனு வாகனத்தில் ஸ்ரீபராசக்தியம்மன் மற்றும் பஞ்ச மூா்த்திகள் வீதியுலா நடைபெறும்.

பத்தாம் நாள்...: அதிகாலை 4 மணிக்கு கோயில் மூலவா் சந்நிதியில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு கோயிலுக்குப் பின்னால் அமைந்துள்ள 2,668 உயர மகா தீப மலை மீது மகா தீபமும் ஏற்றப்படும். இரவு தங்க ரிஷப வாகனங்களில் பஞ்ச மூா்த்திகள் வீதியுலா நடைபெறும்.

3 நாள் தெப்பல் உத்ஸவம்: தொடா்ந்து, 11-ஆம் நாளில் திருவண்ணாமலை அய்யங்குளத்தில் ஸ்ரீசந்திரசேகரா் தெப்பல் உத்ஸவமும், 12-ஆம் நாளில் ஸ்ரீபராசக்தியம்மன் தெப்பல் உத்ஸவமும், 13-ஆம் நாளில் ஸ்ரீசுப்ரமணியா் தெப்பல் உத்ஸவமும் நடைபெறும். இத்துடன் இந்தக் கோயிலின் காா்த்திகை தீபத் திருவிழா நிறைவடைகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT