நீர்நிலைகளை பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு வழங்க வேண்டும் என்று கிராம மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி அறிவுரை வழங்கினார்.
திருவண்ணாமலை வட்டம், பொற்குணம் அருகேயுள்ள காரப்பள்ளம் கிராமத்தில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் புதன்கிழமை மாலை நடைபெற்றது.
முகாமுக்கு, திருவண்ணாமலை கோட்டாட்சியர் ஸ்ரீதேவி தலைமை வகித்தார். கீழ்பென்னாத்தூர் எம்எல்ஏ கு.பிச்சாண்டி, சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியர் வில்சன் ராஜசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசுகையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாயமே பிரதானத் தொழிலாக உள்ளது. ஆனால், மழை நீரை சேகரிப்பதில்லை. கிராமங்களில் உள்ள குளம், குட்டை, ஆறுகள் சிறப்பாகச் செயல்படுவது தான் உங்களின் பலம். அதை அழித்தால் பலவீனம்.
நம் முன்னோர்கள் நமக்கு வழங்கிய கொடையான குளம், குட்டைகளை நாம் பாதுகாத்து, அடுத்த தலைமுறைக்கு வழங்க வேண்டும். இல்லாவிட்டால் கிராமங்கள் அழியக்கூடிய நிலை உருவாகும்.
தமிழகத்திலேயே சொட்டு நீர்ப் பாசனத்தை அதிகம் பயன்படுத்தும் மாவட்டமாக திருவண்ணாமலை திகழ்கிறது. நிலத்தடி நீர் உயர மழைநீரை சேகரிக்க வேண்டும் என்றார்.
தொடர்ந்து, வருவாய்த்துறை மூலம் 970 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், சிறு-குறு விவசாயி சான்று, வேளாண்துறை மற்றும் தோட்டக்கலைத் துறை மூலம் 33 பேருக்கு மானிய விலையில் வேளாண் உபகரணங்கள், ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் 2 குழுக்களுக்கு வங்கிக் கடனுதவி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலம் 2 பேருக்கு சலவைப் பொட்டி என மொத்தம் 1,014 பயனாளிகளுக்கு ரூ.20 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி வழங்கினார்.
முகாமில், அரசு அதிகாரிகள், பொதுமக்கள், பயனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.