வந்தவாசி அருகே எலக்ட்ரீஷியனை கத்தியால் குத்தியவர் கைது செய்யப்பட்டார்.
வந்தவாசியை அடுத்த இந்திரா நகரைச் சேர்ந்தவர் ஓய்வுபெற்ற ராணுவ வீரர் தாஸ் (55). இவர் அந்தப் பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகிறார். கடந்த செவ்வாய்க்கிழமை இந்திரா நகரைச் சேர்ந்த ரமேஷ்(30) என்பவர் தனக்குச் சொந்தமான ஆடுகளை தாஸின் புதிய வீட்டின் பக்கமாக ஓட்டிச் சென்றாராம்.
அப்போது தனது வீட்டின் பக்கமாக ஆடுகளை ஓட்டி வரக்
கூடாது என்று ரமேஷிடம் தாஸ் கூறினாராம். இந்த நிலையில் புதன்கிழமை தாஸின் புதிய வீட்டுக்குச் சென்ற ரமேஷ், ஆடுகளை ஓட்டி வரக்கூடாது என்று ஏன் கூறுகிறீர்கள் என தாஸிடம் கேட்டதால் இருவருக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டது.
அப்போது புதிய வீட்டில் மின் வயரிங் பணி செய்து கொண்டிருந்த மும்முனி கிராமத்தைச் சேர்ந்த நாகு (33), சேட்டு (30) ஆகிய இருவரும் தாஸுக்கு ஆதரவாக ரமேஷிடம் தகராறு செய்தனராம்.
அப்போது, ரமேஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து நாகுவை குத்தினாராம். இதில் பலத்த காயமடைந்த நாகு வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து நாகு அளித்த புகாரின் பேரில் பொன்னூர் போலீஸார் ரமேஷை கைது செய்தனர்.