ஆரணி ஒன்றியத்தில் பல்வேறு கிராமங்களில் வியாழக்கிழமை நடைபெற்ற சிறப்பு குறைதீர் திட்ட முகாம்களில் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கலந்துகொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்றார்.
ஆரணி ஒன்றியத்துக்கு உள்பட்ட முள்ளண்டிரம், அரியப்பாடி, சேவூர், இரும்பேடு, மாமண்டூர், சித்தேரி ஆகிய கிராமங்களில் வியாழக்கிழமை சிறப்பு குறைதீர் திட்ட முகாம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தலைமை வகித்தார். தூசி கே. மோகன் எம்எல்ஏ முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்றார்.
பின்னர் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
தமிழகத்தில் திங்கள்கிழமை தோறும் மக்கள் குறை தீர்நாள் கூட்டமும், வெள்ளிக்கிழமைகளில் வட்டாட்சியர் தலைமையில் அம்மா திட்ட முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன.
மேலும், விவசாயிகள், ஓய்வூதியதாரர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கான குறைதீர் முகாம்களும் நடத்தப்படுகின்றன.
தமிழக அரசு எடுத்து வரும் இத்தகைய முயற்சிகளுக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில், முதலமைச்சரின் சிறப்பு குறைதீர் திட்ட முகாம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் மக்களிடம் நேரடியாகச் சென்று மனுக்களைப் பெற்று தீர்வு காணப்படுகிறது.
இம்மனுக்கள் கணினியில் பதிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட துறைக்கு ஒரு வார காலத்துக்குள் அனுப்பி, மனுக்கள் மீது ஒரு மாத காலத்துக்குள் தீர்வு எட்டப்படும்.
மனுக்களின் மீதான தீர்வுக்குப் பிறகு, செப்டம்பர் மாதத்தில் வட்ட அளவில் விழாக்கள் நடத்தப்பட்டு, பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்குவதோடு, மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கும் தீர்வு காணப்படும்.
திருவண்ணாமலை மாவட்டத்தில், திருவண்ணாமலை, செங்கம், தண்டராம்பட்டு, கீழ்பென்னாத்தூர், ஆரணி, போளுர், கலசப்பாக்கம், ஜமுனாமரத்தூர், செய்யாறு, வந்தவாசி, சேத்துபட்டு, வெம்பாக்கம் ஆகிய 12 வட்டங்களுக்கு உள்பட்ட 1072 கிராமங்களிலும், 273 நகராட்சி மற்றும் பேரூராட்சிகளிலும் பொதுமக்களிடமிருந்து செவ்வாய்க்கிழமை14ஆயிரத்து 419 மனுக்களும், புதன்கிழமை 7ஆயிரத்து 452 மனுக்களும் பெறப்பட்டுள்ளன என்றார் அமைச்சர்.
விழாவில் ஆரணி வருவாய் கோட்ட அலுவலர் எல். மைதிலி, சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியர் வில்சன், ஆரணி ஒன்றியச் செயலர் பிஆர்ஜி.சேகர், பால்கூட்டுறவு சங்க துணைத் தலைவர் பாரி பி.பாபு, கூட்டுறவு பண்டக சாலை மாவட்டத் தலைவர் ஜி.வி.கஜேந்திரன், முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் அ.கோவிந்தராசன், மேற்கு ஆரணி ஒன்றியச் செயலர் எம்.வேலு, பட்டு கூட்டுறவு சங்கத் தலைவர்கள் சேவூர் ஜெ.சம்பத், பாலசந்தர், ஜோதிலிங்கம், முன்னாள் தலைவர்கள் பெருமாள், பிச்சாண்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.