திருவண்ணாமலை

குரலிசை, பரதநாட்டியம், ஓவியப் போட்டிகள்: 16 வயதுக்கு உள்பட்டோருக்கு அழைப்பு

29th Aug 2019 08:51 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலை மாவட்ட அரசு இசைப் பள்ளியில் நடைபெறும் மாவட்ட அளவிலான குரலிசை, பரதநாட்டியம், நாட்டுப்புற நடனம், ஓவியம் உள்ளிட்ட போட்டிகளில் தகுதியுடையோர் பங்கேற்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.
தமிழ்நாடு அரசு கலை, பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு ஜவகர் சிறுவர் மன்றம் சார்பில் மாவட்ட அளவிலான கலைப்போட்டிகள் வரும் ஆக.30-ஆம் தேதி நடைபெறுகிறது.
 திருவண்ணாமலை மாவட்ட அரசு இசைப்பள்ளி வளாகத்தில்  குரலிசை, பரத நாட்டியம், நாட்டுப்புற நடனம், ஓவியம் உள்ளிட்ட பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படும்.
குரலிசை, பரதநாட்டியப் போட்டிகள் காலை 10 மணிக்கும், ஓவியம், நாட்டுப்புற நடனப் போட்டிகள் பிற்பகல் 2 மணிக்கும் நடைபெறுகிறது. 
5 முதல் 8 வயதுக்கு உள்பட்டோர், 9 முதல் 12 வயதுக்கு உள்பட்டோர், 13 முதல் 16 வயதுக்கு உள்பட்டோர் என 3 பிரிவுகளில்  போட்டிகள் நடைபெறும்.
குரலிசைப் போட்டி: குரலிசை (வாய்ப்பாட்டு) போட்டியில் மாணவ-மாணவிகள் தனியாக குரலில் பாட வேண்டும். ஒவ்வொருவருக்கும் அதிகபட்சம் 5 நிமிடங்கள் வழங்கப்படும். இசையை முறையாகப் பயின்றவர்கள் இந்தப் போட்டியில் பங்கேற்கலாம். போட்டியில் தமிழ் பாடல்கள், தேசபக்திப் பாடல்கள் பாட வேண்டும். திரைப்படப் பாடல்கள் அனுமதியில்லை.
பரதநாட்டியப் போட்டி: பரதநாட்டியத்தை முறையாகப் பயின்றோர் இந்தப் போட்டியில் பங்கேற்கலாம். ஒவ்வொருவருக்கும் அதிகபட்சம் 5 நிமிடம் வழங்கப்படும். குழு நடனங்கள் அனுமதியில்லை. பக்க வாத்தியங்களையோ, ஒலி நாடாக்களையோ பயன்படுத்திக் கொள்ளலாம்.
 இவற்றை போட்டியில் பங்கேற்பவர்களே ஏற்பாடு செய்துகொள்ளவேண்டும்.
நாட்டுப்புற நடனம்: நாட்டுப்புற நடனத்துக்கு அதிகபட்சம் 5 நிமிடம் வழங்கப்படும். குழு நடனங்கள் அனுமதியில்லை. பக்க வாத்தியங்களையோ, ஒலி நாடாக்களையோ பயன்படுத்திக் கொள்ளலாம். போட்டியில் பங்கேற்பவர்களே அவற்றை எடுத்து வரவேண்டும்.
ஓவியம்: 40ஷ்30 செ.மீ., அளவுள்ள ஓவியத் தாள்களையே பயன்படுத்த வேண்டும். பென்சில், கிரையான் வண்ணங்கள், போஸ்டர் கலர் , வாட்டர் கலர் பெயிண்டிங் என எவ்வகையிலும் ஓவியங்கள் அமையலாம். வண்ணங்கள், தூரிகைகள் உள்பட தங்களுக்குத் தேவையானவற்றை போட்டியாளர்களே கொண்டு வர வேண்டும். தலைப்புகள் போட்டி தொடங்கும்போது அறிவிக்கப்படும்.
போட்டியில் கலந்துகொள்ளும் மாணவர்கள் தத்தம் பள்ளிகளில் இருந்து பிறந்த தேதி, வயதுக்கான சான்றினை எடுத்து வர வேண்டும். போட்டியில் வெற்றி பெற்றவர்களின் விவரம் தொலைபேசியில் தெரிவிக்கப்படும். 
மாவட்ட அளவிலான போட்டிகளில்  முதல், இரண்டாம், மூன்றாம் பரிசு வென்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்படும்.
9 முதல் 12 வயதுக்கு உள்பட்டோர்,  13 முதல் 16 வயதுக்கு உள்பட்டோருக்கான பிரிவுகளில் முதலிடம் பிடிக்கும் சிறுவர்கள் மாநில போட்டிக்கு அரசு சார்பில் அனுப்பி வைக்கப்படுவர். 
மேலும் விவரங்களுக்கு, திருவண்ணாமலை மாவட்ட அரசு இசைப் பள்ளி, நெ.16, பவளக்குன்று மடாலயம், திருவண்ணாமலை என்ற முகவரியிலோ, அல்லது 04175-223545 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT