செங்கத்தில் விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பான ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
வரும் செப்.2-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழாவைக் கொண்டாடுவது தொடர்பாக வட்டாட்சியர்அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வட்டாட்சியர் பார்த்தசாரதி தலைமை வகித்தார்.
கூட்டத்தில் டி.எஸ்.பி. சின்னராஜ் பங்கேற்று விதிமுறைகள் குறித்துப் பேசினார்.
அப்போது அவர், பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் பந்தல் அமைக்கவேண்டும், அதிக சப்தம் எழுப்பக்கூடிய ஒலிபெருக்கிகளை பயன்படுத்தக் கூடாது. 2-ஆம் தேதி காலையில் நடைபெறும் விநாயகர் சிலை ஊர்வலம் பிற்பகல் 1.30 மணிக்குள் செங்கம் மசூதியை கடந்து செல்லவேண்டும். அதிக சப்தம் எழுப்பக்கூடிய பட்டாசுகளை வெடிக்கக் கூடாது. இரவில் நடத்தப்படும் நிகழ்ச்சிகள் குறித்துவட்டாட்சியர் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவேண்டும்.
சிலைகளை சிலை அமைப்பாளர்கள் பாதுகாத்துக் கொள்ளவேண்டும். சிலை அமைப்பாளர்கள் செங்கம் வட்டாட்சியர் அலுவலகம், மற்றும் செங்கம் காவல் துறையினரிடம் தங்களது பெயர்களை பதிவுசெய்து கொள்ளவேண்டும் என அறிவுறுத்தினார்.
கூட்டத்தில் சிலை அமைப்பாளர்கள், அனைத்துக் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.