திருவண்ணாமலையில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 409 மனுக்கள் வரப்பெற்றன.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்துக்கு, மாவட்ட வருவாய் அலுவலர் பொ.ரத்தினசாமி தலைமை வகித்து முதியோர், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்களிடம் இருந்து கல்வி உதவித்தொகை, வங்கிக் கடனுதவி, திருமண உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, ஜாதிச் சான்று, மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 409 மனுக்களை பெற்றுக் கொண்டார்.
இந்த மனுக்கள் மீதும், ஏற்கெனவே பெறப்பட்டு நிலுவையில் உள்ள மனுக்கள் மீதும் விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
கூட்டத்தில், சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் கலசப்பாக்கம் வட்டம், பத்தியவாடி கிராமத்தைச் சேர்ந்த வளர்மதிக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறுவதற்கான ஆணை, வந்தவாசி வட்டம், சாத்தப்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த பரிமளா, செய்யாறு வட்டம், வடுகப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த வனிதா ஆகியோர்களுக்கு விதவை உதவித்தொகைகள் பெறுவதற்கான ஆணைகளை மாவட்ட வருவாய் அலுவலர் பொ.ரத்தினசாமி வழங்கினார்.
கூட்டத்தில், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் வில்சன் ராஐசேகர், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் பரிமளா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் லாவண்யா, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சு.சரவணன் மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.