வந்தவாசியை அடுத்த தேசூர் பேரூராட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை மண்ணெண்ணையை ஊற்றிக் கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட பெண்ணை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.
வந்தவாசியை அடுத்த தேசூர் பேரூராட்சிக்கு உள்பட்ட சாமி கவுண்டர் தெருவைச் சேர்ந்தவர் சேகர். இவரது வீட்டின் பின்புறத்தில் உள்ள தூர்ந்துபோன ஏரிவரத்துக் கால்வாயில் அதே பகுதியைச் சேர்ந்த மற்றொருவர் வீட்டின் கழிவுநீர் தேங்குவது தொடர்பாக பிரச்னை இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வரிபாக்கி இருப்பதாகக் கூறி சேகர் வீட்டின் குடிநீர் குழாய் இணைப்பை தேசூர் பேரூராட்சி அலுவலர்கள் துண்டித்தனராம்.
இதைக் கண்டித்து சேகர், அவரது மனைவி சாமுண்டீஸ்வரி மற்றும் பொதுமக்கள் தேசூர் பேரூராட்சி அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, சாமுண்டீஸ்வரி தன்மீது மண்ணெண்ணையை ஊற்றிக் கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அங்கிருந்த தேசூர் போலீஸார் அவரை தடுத்து நிறுத்தி அவர் மீது தண்ணீரை ஊற்றினர்.
பின்னர், உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீஸார் கூறியதன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.
இதுகுறித்து சாமுண்டீஸ்வரி கூறியதாவது: கடந்த 2018-2019-ஆம் ஆண்டின் வீட்டு வரி மற்றும் குடிநீர் வரியை பாக்கி இல்லாமல் ஏற்கெனவே செலுத்திவிட்டோம்.
தற்போது 2019-2020-ஆம் ஆண்டின் முதல் அரையாண்டு முடிவதற்கு முன்பே வரிபாக்கி வைத்திருப்பதாகக் கூறி, எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் எங்கள் வீட்டு குடிநீர் குழாய் இணைப்பை துண்டித்துவிட்டனர்.
கழிவுநீர் தேங்குவது தொடர்பான பிரச்னையில் மற்றொருவரின் தூண்டுதலின் பேரிலேயே இந்தச் செயலில் ஈடுபட்டுள்ளனர் என்றார்.