திருவண்ணாமலை

செய்யாறை மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி பேரணி

27th Aug 2019 08:06 AM

ADVERTISEMENT

செய்யாறை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, செய்யாறை மாவட்டமாக்கக் கோரும் இயக்கம் சார்பில் திங்கள்கிழமை மக்கள் பேரணி நடைபெற்றது. 
செய்யாறோடு தொடங்கப்பட்ட  திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய வருவாய் கோட்டங்கள் மாவட்டங்களாக அமையப் பெற்றுள்ள நிலையில், செய்யாறை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை தோற்றுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி 
இந்தப் பேரணி நடைபெற்றது.
பேரணியானது, செய்யாறு பெரியார் சிலையில் தொடங்கி மார்க்கெட், காந்தி சாலை, பேருந்து நிலையம், ஆற்காடு சாலை வழியாக கோட்டாட்சியர் அலுவலகத்தில் நிறைவு பெற்றது. 
பின்னர், செய்யாறில் செயல்பட்டு வரும் மாவட்டத்துக்கு இணையான இரண்டாம் நிலை அரசு அலுவலகங்களின் தகவல்கள் மற்றும் சுமார் 2 ஆயிரம் பேர் கையொப்பமிட்ட மாவட்டமாக அறிவிக்கக் கோரிய மனுவை வருவாய் கோட்டாட்சியர் விமலாவிடம் வழங்கினர்.
பேரணியில் செய்யாறில் உள்ள அனைத்துக் கட்சியினர், அனைத்து சமூகத்தினர், வியாபாரிகள், பொது மக்கள், கல்லூரி மாணவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT