தண்ணீரைச் சேகரிக்காவிட்டால் எதிர்காலத்தில் பல்வேறு இன்னல்களைக் சந்திக்க நேரிடும். எனவே, இப்போதே தண்ணீரைச் சேகரிக்க வேண்டும் என்று பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி அறிவுரை வழங்கினார்.
திருவண்ணாமலை எஸ்.ஆர்.ஜி.டி.எஸ்., மெட்ரிக் மேல்
நிலைப் பள்ளியில் ஜல்சக்தி அபியான் திட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, பள்ளிக் கல்வித் துறை இணைந்து நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தலைமை வகித்தார்.
ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பா.ஜெயசுதா, உதவி ஆட்சியர் (பயிற்சி) அனந்த் மோகன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இல.நடராஜன், திருவண்ணாமலை கோட்டாட்சியர் ஸ்ரீதேவி, துணை ஆட்சியர் (பயிற்சி) மந்தாகினி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட ஆட்சியர் தலைமையில் அரசு அதிகாரிகள், பள்ளி ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஜல் சக்தி அபியான்-நீர் மேலாண்மை இயக்கம் குறித்த உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
தொடர்ந்து, பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்ட ஆட்சியர், பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நெல்லிக்காய், மாம்பழம், மாதுளம், கொய்யா உள்ளிட்ட மரக்கன்றுகளை வழங்கினார்.
பின்னர் மாணவ-மாணவிகளுக்கு அறிவுரை வழங்கி அவர் பேசியதாவது:
மழை நீரைச் சேகரிக்க பள்ளி மாணவ-மாணவிகள் முன்வர வேண்டும். மழை நீரை சேகரிக்காவிட்டால் மரம், ஏரி, ஆறு, குளங்கள் இல்லாத உலகத்தைப் பார்க்க நேரிடும்.
இயற்கை வழங்கும் செல்வத்தை நாம் தான் பாதுகாக்க வேண்டும். நாம் பயன்படுத்தும் உடை, உணவு, காய்கறி, இறைச்சி என அனைத்துப் பொருள்களையும் தயாரிக்க தண்ணீர் தேவை. தண்ணீரை சேகரிக்காவிட்டால் எதிர்காலத்தில் பல்வேறு சிரமங்களைச் சந்திக்க நேரிடும். எனவே, இப்போதே தண்ணீரைச் சேமிக்க வேண்டும் என்றார்.
விழாவில், திருவண்ணாமலை மாவட்டக் கல்வி அலுவலர் ச.அருள்செல்வம் மற்றும் அரசு அலுவலர்கள், பள்ளி நிர்வாகிகள், ஆசிரிய-ஆசிரியைகள், மாணவ-மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.