வேட்டவலம் அருகே வீரனார் கோயில் கட்ட அனுமதி கோரியும், எதிர்ப்புத் தெரிவித்தும் இருவேறு பிரிவினர் 2 இடங்களில் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
வேட்டவலத்தை அடுத்த ஆங்குணம் கிராமத்தில் உள்ள குளக்கரையை ஒரு பிரிவினர் ஆக்கிரமித்து புதிதாக வீரனார் கோயில் கட்ட முயன்றனராம். தகவலறிந்த இதே கிராமத்தைச் சேர்ந்த மற்றொரு பிரிவினர் குளத்தை ஆக்கிரமித்து கோயில் கட்டுவதாக கீழ்பென்னாத்தூர் வட்டாட்சியர் ராம்பிரபுவிடம் சில நாள்களுக்கு முன்பு மனு அளித்தனர்.
இதையடுத்து, வட்டாட்சியர் ராம்பிரபு தலைமையிலான அதிகாரிகள் வெள்ளிக்கிழமை குளக்கரைப் பகுதிக்குச் சென்று கோயில் கட்டுவதற்காக அமைக்கப்பட்டிருந்த கொட்டகையை அகற்றினர். இந்த நிலையில், சனிக்கிழமை காலை மீண்டும் கோயில் கட்டுமானப் பணிகளை தொடங்க ஒரு பிரிவினர் குளக்கரையில் குவிந்தனர்.
தகவலறிந்த கோட்டாட்சியர் ஸ்ரீதேவி சென்று நீர்நிலையில் கோயில் கட்ட வேண்டாம் என்றும், வேறு இடத்தை தேர்வு செய்து கொடுத்தபிறகு கோயில் கட்டுங்கள் என்றும் கூறிவிட்டுச் சென்றார்.
விநாயகர் சிலை வைத்து வழிபாடு: ஆனால், கோட்டாட்சியர் சென்ற சிறிது நேரத்தில் பிரச்னைக்குரிய இடத்தில் விநாயகர் சிலையை வைத்து பொதுமக்கள் வழிபடத் தொடங்கினர்.
சாலை மறியல்: தகவலறிந்த ஒரு பிரிவினர் விநாயகர் சிலையை அகற்றக் கோரியும், மற்றொரு பிரிவினர் விநாயகர் சிலையை அகற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் இருவேறு இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பதற்றம் ஏற்பட்டது.
இதையடுத்து, திருவண்ணாமலை மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வனிதா, கோட்டாட்சியர் ஸ்ரீதேவி, டி.எஸ்.பி. அண்ணாதுரை ஆகியோர் வந்து இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். கோயிலை அகற்றக்கூடாது என்று ஒரு தரப்பினரும், அகற்றியே தீர வேண்டும் என்று மற்றொரு பிரிவினரும் விடாப்பிடியாக அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, மாற்று இடம் தேர்வு செய்யப்பட்டு, அந்த இடத்தில் கோயில் கட்ட வருவாய்த் துறை, காவல் துறை அதிகாரிகள் அனுமதி அளித்தனர். இதற்கு வீரனார் கோயில் கட்டும் விழாக் குழுவினர் ஒப்புக்கொண்டனர். மற்றொரு பிரிவினரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.
புதிய இடம் தேர்வு: இதையடுத்து, அதே பகுதியில் மாற்று இடம் தேர்வு செய்து அரசு சார்பிலேயே இடம் சுத்தம் செய்து தரப்பட்டது. இதன்பிறகு புதிய இடத்தில் விநாயகர் சிலையை பொதுமக்கள் வைத்து வழிபாடு செய்தனர். காலை 8 மணிக்குத் தொடங்கிய கோயில் பிரச்னைக்கு மாலை 6 மணிக்கு தீர்வு காணப்பட்டு, அனைவரும் கலைந்து சென்றனர்.
வருவாய்த் துறை, காவல் துறை அதிகாரிகள் ஆங்குணம் கிராமத்தில் 5 மணி நேரத்துக்கும் மேலாக முகாமிட்டு ஒரே நாளில் பிரச்னைக்கு தீர்வு கண்டனர்.