திருவண்ணாமலை

செங்கம் வரதந்தாங்கல் ஏரியில் குப்பைகள் கொட்டப்படுவதைத் தடுக்கக் கோரிக்கை

11th Aug 2019 02:01 AM

ADVERTISEMENT


செங்கம் வரதந்தாங்கல் ஏரியில் குப்பைக் கழிவுகள் கொட்டப்படுவதைத் தடுக்கக் கோரி, மாவட்ட ஆட்சியருக்கு சேயாறு சீரமைப்பு சங்கத்தினர் மனு அனுப்பினர்.
செங்கம் துக்காப்பேட்டை பகுதியில் திருவண்ணாமலை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி வரதந்தாங்கல் ஏரி அமைந்துள்ளது. முள்புதர்கள் மண்டியும், குப்பைக் கழிவுகள் கொட்டப்பட்டும், ஆக்கிரமிக்கப்பட்டும் வந்த இந்த ஏரியை தூர்வார விவசாயிகளும், பொதுமக்களும் மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்தனர். 
எனினும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது. இதையடுத்து, செங்கம் சேயாறு சீரமைப்பு சங்கத்தினர் சுமார் ரூ.3 லட்சம் செலவில் வரதந்தாங்கல் ஏரியை தூர்வாரி, குப்பைகளை அகற்றி, சீரமைத்தனர்.
இந்த நிலையில், செங்கம் நகரில் அகற்றப்படும் ஆக்கிரமிப்புகள், கழிவுநீர் கால்வாய்கள் தூர்வாரப்பட்டு அதில் சேகரமாகும் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் ஆகியவை பேரூராட்சி நிர்வாக டிராக்டர் மூலம் வரதந்தாங்கல் ஏரியில் தற்போது கொட்டப்பட்டு வருவதாகத் தெரிகிறது.
எனவே, தூர்வாரி சீரமைக்கப்பட்ட இந்த ஏரியில் குப்பைக் கழிகவுகளை கொட்டி வரும் செங்கம் பேரூராட்சி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கவும், ஏரியில் குப்பை கொட்டப்படுவதைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி செங்கம் சேயாறு சீரமைப்பு சங்கத்தினர் மாவட்ட ஆட்சியருக்கு வெள்ளிக்கிழமை மனு அனுப்பினர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT