திருவண்ணாமலை

சூதாட்டத்தில் மோதல்: இளைஞரை கத்தியால் குத்தியவர் கைது

11th Aug 2019 01:59 AM

ADVERTISEMENT

கீழ்பென்னாத்தூர் அருகே சூதாட்டத்தின்போது ஏற்பட்ட மோதலில் இளைஞரை கத்தியால் குத்தியவரை போலீஸார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாரியம்மன் கோயில் தெரு, 10-ஆவது தெருவைச் சேர்ந்த தங்கம் மகன் செல்வம் (42). திருவண்ணாமலை கோரிமேட்டுத் தெருவைச் சேர்ந்த ஏழுமலை மகன் சவுந்தர் (35). இவர்களும், விழுப்புரம் மாவட்டம், மாதப்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த சிலரும் சேர்ந்து வெள்ளிக்கிழமை இரவு மாதப்பூண்டியில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டனராம்.
சூதாட்டத்தில் தனது ஒன்றரைப் பவுன் மோதிரத்தை செல்வம் இழந்தாராம். இதையடுத்து, மோதிரம் இல்லாமல் வீட்டுக்குச் சென்றால் மனைவி திட்டுவார் என்றும், எனவே மோதிரத்தை திருப்பித் தருமாறும் சவுந்தரிடம் செல்வம் கேட்டாராம்.
ஆனால், மோதிரத்தை சவுந்தர் திருப்பித் தராததால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த செல்வம், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சவுந்தரின் வயிற்றில் குத்தினாராம்.
பலத்த காயமடைந்த அவரை பொதுமக்கள் மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கீழ்பென்னாத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்து செல்வத்தை கைது செய்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT