கலசப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்களுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், அவர்கள் கலசப்பாக்கம் அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டனர். இங்கு அனுமதிக்கப்பட்டுள்ள பொதுமக்களை எம்.எல்.ஏ. வி.பன்னீர்செல்வம் சனிக்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
கலசப்பாக்கம் மற்றும் சுற்றுவட்டாரக் கிராமங்களான காப்பலூர், பூண்டி, பழங்கோவில் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களுக்கு கடந்த 4 நாள்களாக திடீரென வாந்தி, பேதி, காய்ச்சல் ஏற்பட்டது. இதனால், அவர்கள் கலசப்பாக்கம் மருத்துவமனையில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களை எம்.எல்.ஏ. வி.பன்னீர்செல்வம் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், பொதுமக்களுக்கு முறையான மருத்துவச் சிகிச்சைகளை அளிக்குமாறு மருத்துவர்களிடம் எம்.எல்.ஏ. அறிவுறுத்தினார்.
இதுகுறித்து மருத்துவர் ஜீவராணி கூறியதாவது: கலசப்பாக்கம் பகுதியில் கடந்த 5 மாதங்களாக கடுமையான கோடை வெயில் நிலவி வந்தது. தற்போது கடந்த ஒரு வாரமாக திடீரென மழை பெய்ததால், பருவநிலை மாற்றம் ஏற்பட்டு பொதுமக்கள் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கலசப்பாக்கம் மருத்துவமனைக்கு தினந்தோறும் 500-க்கும் மேற்பட்டவர்கள் வெளி நோயாளிகளாக வந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். முதியவர்கள் 25-க்கும் மேற்பட்டோர் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றார். அப்போது, மருத்துவர் ரேவதி, அதிமுக பொதுக்குழு உறுப்பினர் பொய்யாமொழி, ஒன்றியக்குழு முன்னாள் துணைத் தலைவர் கருணாமூர்த்தி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத் தலைவர் பத்மாவதிஜீவரத்தினம், ஊராட்சிச் செயலர் முருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.