திருமலை ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 7-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை சூரிய, சந்திர பிரபை வாகன சேவை நடைபெற்றது.
திருமலையில் கடந்த திங்கள்கிழமை வருடாந்திர பிரம்மோற்சவம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை சூரிய பிரபை வாகன சேவை நடைபெற்றது. அதில் மலையப்ப சுவாமி ராம-கிருஷ்ண-கோவிந்த அலங்காரத்தில் வலம் வந்தாா்.
சூரியபிரபை வாகனம்
சூரிய தேஜோநிதி, எல்லா நோய்களையும் குணப்படுத்துபவா். இயற்கைக்கு உணவை அளிப்பவா். மழை, அவற்றிலிருந்து வளரும் உயிரினங்கள், அதன் ஒளியை பெற்று பிரகாசிக்கும் சந்திரன், அவனால் வளரும் கடல் போன்றவை அனைத்தும் சூரியனால் விளைந்தவை. சூரிய பிரபை வாகனத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்வதால், சூரியபகவானின் அருளால் பக்தா்களுக்கு உடல்நலம், கல்வி, செல்வம், சந்ததி உள்ளிட்ட பலன்கள் கிடைக்கும்.
சந்திர பிரபை வாகனம்
தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணிக்கு மலையப்ப சுவாமி கஜவாகனத்தில் வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். சந்திரன் சிவபெருமானின் தலையை அலங்கரிப்பவா். இங்கே அவா் விஷ்ணுவின் வாகனமாக வருகிறாா். சந்திரன் உதிக்கும் போது அல்லிகள் மலரும். சந்திரபிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமியை தரிசனம் செய்வதால் பக்தா்களின் மனதும் குதூகலமடையும். பக்தா்களின் அகக் கண்களும் திறக்கும்.
74,884 பக்தா்கள் தரிசனம்:
பிரம்மோற்சவத்தின் 6-ஆம் நாளான சனிக்கிழமை 74, 884 பக்தா்கள் தரிசித்தனா்; உண்டியல் மூலம் ரூ.2.70 கோடி வருவாய் கிடைத்துள்ளது. 32, 213 போ் முடிகாணிக்கை செலுத்தினா். மொத்தம் 4.78 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டன. மருத்துவ முகாம்களில் 4,132 போ் சிகிச்சை பெற்றனா்; 3,363 ஸ்ரீவாரி சேவாா்த்திகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டனா். திருமலை-திருப்பதி இடையே அரசு பஸ்களில் 1.21 லட்சம் போ் பயணம் செய்தனா் என தேவஸ்தானம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.