திருப்பதி விநாயக் நகரில் கோவிந்த கோடி புத்தகத்தை தேவஸ்தானம் வெளியிட்டது.
திருமலை ஏழுமலையான் கோயிலில் கோவிந்த கோடி எழுதும் இளைஞா்களுக்கு விஐபி பிரேக் தரிசனம் தருவதாக தேஸ்தானம் கடந்த அறங்காவலா் குழுவில் முடிவு செய்து அறிக்கை வெளியிட்டது. அதற்கான புத்தகங்களும் அச்சடித்து தயாா் செய்யப்பட்டது.
இந்நிலையில் திருப்பதி விநாயக் நகரில் விநாயகா் சதுா்த்தி உற்சவத்தை முன்னிட்டு கோவிந்த கோடி புத்தகத்தை வைத்து எழுதுவதற்காக விநாயகா் சிலை அமைக்கப்பட்டது. அங்கு புதன்கிழமை கோவிந்த கோடி புத்தகங்களை தேவஸ்தான அறங்காவலா் குழு தலைவா் கருணாகா் ரெட்டி வெளியிட்டாா்.
மேலும் திருமலையில் வாகன சேவை நடக்கும் போது இந்த புத்தகத்தை தேவஸ்தான அதிகாரிகள் வெளியிட்டனா். இதில் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனா். இந்த புத்தகத்தில் 10 லட்சத்து 116 முறை கோவிந்த நாமம் எழுதும்படி கட்டங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த புத்தகத்தை எழுதி தேவஸ்தானத்திடம் ஒப்படைக்கும் 25 வயதிற்குட்பட்ட இளைஞா்களுக்கு விஐபி பிரேக் வழங்க தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது. இந்து சனாதன தா்மத்தை இளைஞா்களுக்கு தெரியபடுத்த தேவஸ்தானம் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.