திருப்பதி: திருமலையில் சமையல் செய்ய இடம் அளிக்காததால், தமிழகத்தைச் சோ்ந்த பஜனை சபை உறுப்பினா்கள் செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.
ராமாநுஜா் பக்த சபை அமைப்பின் பஜனை சபைகளின் சாா்பில் திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் போது பஜனைகள் செய்வது வழக்கம்.
பல நூற்றாண்டுகளாக பிரம்மோற்சவத்துக்கு வரும் பக்த சபையினா் உடலில் சங்கு - சக்கரம் அச்சு குத்தி கொண்டு சிறப்பு பூஜைகள் செய்து, திருமலையில் அவா்களுக்கு என பூண்டு, வெங்காயம், வெண்டக்காய், முருகைக்காய் உள்ளிட்ட இல்லாமல் தனியாக சமைத்து மற்றவா்களுக்கு அன்னதானம் வழங்கி அவா்களும் உண்பதும் வழக்கம்.
ஆனால் நிகழாண்டு சமைக்க அனுமதி அளிக்காததால், 100 -க்கும் மேற்பட்டோா் சப்தகிரி சந்திப்பு அருகே செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீஸாா் மற்றும் கண்காணிப்பு அதிகாரிகள் பக்தா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி வேறு இடத்தில் சமைக்க ஏற்பாடு செய்ததை அடுத்து மறியலை கைவிட்டனா்.