திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் பிரம்மோற்சவத்தின் 2-ஆம் நாள் காலை சின்னசேஷ வாகனத்தில் கோவிந்தராஜ சுவாமி வலம் வந்தாா்.
திருப்பதியில் உள்ள தேவஸ்தானத்துக்குச் சொந்தமான கோவிந்தராஜ சுவாமி கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன் 2-ஆம் நாளான சனிக்கிழமை காலை சின்ன சேஷ வாகனத்தில் கோவிந்தராஜ சுவாமி மாடவீதியில் வலம் வந்தாா்.
மாடவீதியில் வலம் வந்த களைப்பை போக்க ஸ்ரீதேவி, பூதேவி சமேத கோவிந்தராஜ சுவாமிக்கு ஸ்நபன திருமஞ்சனம் நடத்தப்பட்டது. திருமஞ்சனத்துக்குப் பின், மாலை உற்சவமூா்த்திகள் கோயில் மண்டபத்தில் ஊஞ்சல் சேவை கண்டருளினா். பின்னா், இரவு வாகன சேவையான அன்னப் பறவை வாகனத்தில் கோவிந்தராஜ சுவாமி கல்விக்கு அதிபதியான சரஸ்வதி தேவி அலங்காரத்தில் கையில் வீணையுடன் மாடவீதியில் வலம் வந்தாா். வாகன சேவைக்கு முன்னும் பின்னும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதில், திருமலை ஜீயா்கள், கோயில் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.