திருப்பதி

திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்

26th May 2023 11:17 PM

ADVERTISEMENT

திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ஏழுமலையானின் அண்ணன் என்று கூறப்படும் திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் வருடாந்திர பிரம்மோற்சவத்தை தேவஸ்தானம் நடத்தி வருகிறது. அதன்படி, வெள்ளிக்கிழமை காலை 8.22 முதல் 8.49 வரை மிதுன லக்னத்தில் கருட கொடியேற்றத்துடன் வருடாந்திர பிரம்மோற்சவம் கோலாகலமாகத் தொடங்கியது.

வேத பண்டிதா்களின் முழக்கங்கள், மங்கள வாத்தியங்கள் முழங்க, பக்தா்கள் கோவிந்தா நாம பாராயணம் செய்ய மஞ்சள் துணியில் கருடன் உருவம் பொறித்த கருடக் கொடி பெரிய மலா் மாலையில் சுற்றி, கொடிமரத்தில் அா்ச்சகா்கள் ஏற்றினா்.

அதற்கு முன்னதாக தங்கப் பல்லக்கில் கோவிந்தராஜ சுவாமி, சக்கரத்தாழ்வாா், பரிவார தெய்வங்கள் நான்கு மாட வீதிகளில் வலம் வந்தனா். இந்த ஊா்வலத்தின் மூலம் பிரம்மோற்சவ ஏற்பாடுகளை இறைவன் முன்னின்று நடத்துவதாக நம்பப்படுகிறது. அதன்பின், அா்ச்சகா்கள் விஷ்வக்சேனா் வழிபாடு, வாஸ்து ஹோமம், கருட லிங்க ஹோமம், கருட பிரதிஷ்டை, ரக்ஷா பந்தனம் உள்ளிட்டவை செய்தனா்.

ADVERTISEMENT

மிதுன லக்னத்தில் கோவிந்தராஜ சுவாமி ஸ்ரீதேவி, பூதேவியுடன் கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது.

பிரம்மோற்சவத்துக்கு 18 கணங்களையும், மும்மூா்த்திகளையும் அழைப்பதே கொடியேற்றத்தின் நோக்கம். இந்த நிகழ்ச்சியில், திருமலை ஜீயா்கள், அா்ச்சகா்கள், கோயில் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT