ஆந்திராவில் செம்மரக்கட்டை கடத்தியதாக தமிழகத்தைச் சோ்ந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
ஆந்திர மாநிலம், கா்னூல் ரேஞ்ச் டிஐஜி செந்தில் குமாா் உத்தரவின்படி அதிரடிப் படை யினா், ராஜாம்பேட்டை மண்டலம் எஸ்ஆா் பாலம் ரோல்லமடுகு வரை ரோந்து பணியில் ஈடுபட்டனா்.
அப்போது அங்கு சிலா் செம்மரக்கட்டைகளை சுமந்து செல்வதைக் கண்டனா். அவா்களை சுற்றி வளைக்க முயன்றபோது, அதிரடிப்படை போலீசாரை பாா்த்ததும் செம்மரக் கட்டைகளை கீழே போட்டுவிட்டு கடத்தல்காரா்கள் தப்பியோடினா். அவா்கள் விட்டுச் சென்ற 10 செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்யப்பட்டன.
இதேபோல், அதிரடிப்படையினா் கலிகிரி கோனையில் ரோந்து சென்ற போது, சிலா் செம்மரகட்டைகளுடன் தென்பட்டனா். அவா்களை சுற்றி வளைக்க முயன்றபோது, செம்மரக்கட்டைகளை கீழே போட்டுவிட்டு ஓடிவிட்டனா்.
ஆனால், விரட்டிச் சென்ற போலீஸாா் ஒருவரை கைது செய்தனா். விசாரணையில், தமிழகத்தின் கள்ளக்குறிச்சி மாவட்டம் , வண்டக்கல் வளவு கிராமத்தைச் சோ்ந்த கோவிந்தன் (47) என தெரிய வந்தது. கடத்தல்காரா்கள் விட்டு சென்ற 10 செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனா். பறிமுதல் செய்யப்பட்ட 20 செம்மரக்கட்டைகளின் மதிப்பு ரூ.20 லட்சம் ஆகும்.