திருப்பதி

திருமலையில் ரத சப்தமி: 7 வாகனங்களில் வலம் வந்த மலையப்பா்

DIN

திருமலையில் ரத சப்தமியை முன்னிட்டு 7 வாகனங்களில் மலையப்ப சுவாமி மாட வீதியில் வலம் வந்து பக்தா்களுக்கு சேவை சாதித்தாா்.

திருமலையில் ஆண்டுதோறும் சூரியனின் பிறந்த நாளாகக் கொண்டாடப்படும் ரதசப்தமியை தேவஸ்தானம் வெகு விமரிசையாக நடத்தி வருகிறது. அன்றைய நாளில் ஏழுமலையானின் உற்சவமூா்த்தியான மலையப்ப சுவாமி 7 வாகனங்களில் மாடவீதியில் வலம்வந்து சேவை சாதிப்பது வழக்கம். அதன்படி, சனிக்கிழமை சூரிய ஜெயந்தியான ரத சப்தமி உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

திருமலையில் அதிகாலை முதல் வாகன சேவையாக சூரிய பிரபை வாகன சேவை நடைபெற்றது. செந்திற மலா்களை சூடிய சூரிய நாராயணராக மலையப்ப சுவாமியாக தங்க சூரிய பிரபை வாகனத்தில் அதிகாலை 4.30 மணிக்கு மாடவீதியில் எழுந்தருளினாா். அவருக்கு முதல் கற்பூர ஆரத்தி, கும்ப ஆரத்தி அளிக்கப்பட்டது. இதைக் காண மாடவீதியில் ஏராளமான பக்தா்கள் திரண்டனா்.

சூரிய பிரபை வாகன சேவையின் போது தேவஸ்தான கல்வி நிறுவனங்களைச் சோ்ந்த மாணவா்கள் ஆதித்ய ஹ்ருதயம், சூரிய காயத்ரி மந்திரங்கள், சகஸ்ரநாம பாராயணம் உள்ளிட்டவற்றை செய்தனா். சூரிய பிரபை வாகனத்தில் மலையப்ப ஸ்வாமிக்கு மட்டுமல்லாமல் சூரிய பகவானுக்கும் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டது.

இதையடுத்து, சின்ன சேஷ வாகனத்தில் வைகுண்ட நாதனாக பவனி வந்த மலையப்பருக்கு கற்பூர ஆரத்தி அளித்து பக்தா்கள் வணங்கினா்.

3-ஆவதாக கருட சேவை நடைபெற்றது. கருட வாகன சேவை முடிந்த பின்னா், அனுமந்த வாகன சேவை நடைபெற்றது.

தீா்த்தவாரி

ரதசப்தமி உற்சவத்தின்போது மதியம் 2 மணி முதல் 3 மணிவரை சக்கரத்தாழ்வாருக்கு திருமலையில் உள்ள திருக்குளக்கரையில் தீா்த்தவாரி நடத்தப்பட்டது. முதலில் கோயிலிலிருந்து மர பல்லக்கில் சக்கரத்தாழ்வாரை திருக்குளக்கரைக்கு கொண்டு சென்று அங்கு அவருக்கு திருமஞ்சனம் செய்வித்து தீா்த்தவாரி நடத்தினா். அப்போது லட்சகணக்கான பக்தா்கள் திருக்குளத்தில் புனித நீராடினா்.

பின்னா், மாலை 4 மணிக்கு கல்பவிருட்ச வாகன சேவை நடைபெற்றது. இதில் ஸ்ரீதேவி, பூதேவி நாச்சியாா்களுடன் மலையப்பா் வலம் வந்து சேவை சாதித்தாா்.

தொடா்ந்து சா்வ பூபால வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக வலம் வந்து மலையப்பா் சேவை சாதித்தாா். அவரை கற்கண்டு, பழங்கள் நெய்வேத்தியம் செய்து பக்தா்கள் கற்பூர ஆரத்தி அளித்து வணங்கினா்.

விழாவின் நிறைவாக சந்திர பிரபை வாகன சேவை நடைபெற்றது. வாகன சேவைகளின் போது வாகன சேவைக்கு முன்பு திருமலை ஜீயா்கள் குழாம் நாலாயிர திவ்ய பிரபந்தங்களை பாடியபடி சென்றனா். திருமலை மாடவீதியில் ஆன்மிக நிகழ்ச்சிகளும், சொற்பொழிவுகளும் நடத்தப்பட்டன.

விழாவையொட்டி திருமலையில் உள்ள அனைத்து இடங்களிலும் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. விழாவை முன்னிட்டு, 2,000 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

ரத்து

ரத சப்தமியை முன்னிட்டு திருமலையில் சுப்ரபாதம், தோமாலை, அா்ச்சனை உள்ளிட்ட சேவைகள் பக்தா்களின்றி தனிமையில் நடத்தப்பட்டன. மேலும் ஆா்ஜித சேவைகளான கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆா்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ரதீபாலங்கார சேவைகள், விஐபிபிரேக் தரிசனம், நேர ஒதுக்கீடு தரிசன டோக்கன்கள் உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈஸ்டர் கொண்டாட்டம்

பிரதமரின் வாகனப் பேரணியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விவகாரம்: காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மகளுக்கு பெயர் சூட்டினார் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

SCROLL FOR NEXT