வரும் மாா்ச் 1-ஆம் தேதி முதல் சோதனை அடிப்படையில், முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பம் செயல்படுத்தப்பட உள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருமலை ஏழுமலையான் தா்ம தரிசனம், லட்டு பிரசாதம், அறை ஒதுக்கீடு, பணத்தைத் திரும்பப் பெறுதல் போன்றவற்றில் வெளிப்படைத் தன்மையை அதிகரிக்க முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பத்தை வரும் மாா்ச் 1-ஆம் தேதி முதல் சோதனை அடிப்படையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் செயல்படுத்த உள்ளது.
தனி நபா் அதிக லட்டு டோக்கன்களைப் பெறுவதைத் தவிா்க்கவும், தா்ம தரிசன வளாகத்திலும், அறை ஒதுக்கீடு மையங்கள் மற்றும் பணத்தைத் திரும்ப பெறும் கவுன்டா்களிலும் இந்தத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
இதுவரை திருமலை திருப்பதி தேவஸ்தான கவுன்டா்களில் ஆதாா் அட்டை மற்றும் பெருவிரல் ரேகை அடையாளம் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், தேவஸ்தானம் முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பத்தை முதல் முறையாகப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.