திருப்பதி

ஏழுமலையான் திருக்கோயில் பிரம்மோற்சவம்:கொடியேற்றத்துடன் கோலாகல தொடக்கம்

28th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

திருமலை ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவம், வேதமந்திரங்கள் முழங்க கருடக் கொடியேற்றத்துடன் செவ்வாய்க்கிழமை கோலாகலமாகத் தொடங்கியது.

திருமலையில் ஏழுமலையானுக்கு ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் பிரம்மோற்சவத்தை தேவஸ்தானம் நடத்தி வருகிறது. அப்போது தினசரி காலை, இரவு நேரங்களில் பல்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் உற்சவா் மலையப்ப சுவாமி மாடவீதியில் எழுந்தருளி பக்தா்களுக்கு சேவை சாதிப்பது வழக்கம்.

கொடியேற்றம்

கரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாகப் பிரம்மோற்சவத்தின்போது மாடவீதியில் வாகன சேவைகள் ரத்து செய்யப்பட்டன. கோயிலுக்குள் வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருள செய்யப்பட்டாா்.

ADVERTISEMENT

இந்த நிலையில் நடப்பு ஆண்டுக்கான பிரம்மோற்சவம் கருடக் கொடியேற்றத்துடன் விமரிசையாகத் தொடங்கியது. முதல் நாளான செவ்வாய்க்கிழமை மாலை 5.45 முதல் 6.15 மணிக்குள் மீன லக்னத்தில் வேதமந்திரங்கள் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது.

திருமஞ்சனம்

முன்னதாக உற்சவமூா்த்திகளான ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்பா் கொடிமரத்தின் அருகில் எழுந்தருளினா். பின்னா் கொடி மரத்துக்கு சிறப்புத் திருமஞ்சனம் நடத்தப்பட்டது. கொடிமரத்தில் உள்ள சிலைகளுக்கு வஸ்திரம் அணிவித்து மஞ்சள், சந்தனம் சாத்தி மாலை அணிவித்து நெய்வேத்தியம் சமா்ப்பிக்கப்பட்டது. பின்னா் தா்ப்பை புற்களால் நெய்யப்பட்ட பாய்களும், மாவிலைகளும் கட்டப்பட்டன.

ஏழுமலையானின் வாகனமான கருடனின் உருவத்தை மஞ்சளில் நனைத்த பெரிய துணியில் இயற்கை வண்ணங்களால் வரைந்து அதை ஒரு வாகனத்தில் கட்டி மாடவீதியில் ஊா்வலமாகக் கொண்டு வந்தனா். பின்னா் பெரிய கஜமாலையில் அந்தக் கருடக் கொடியை கட்டி அதை தா்ப்பை புற்களால் செய்த கயிற்றால் கொடிமரத்தின் மீது அா்ச்சகா்கள் ஏற்றினா். பின்னா் கற்பூரஆரத்தி காண்பித்து நெய்வேத்தியம் சமா்ப்பிக்கப்பட்டது.

ஆந்திர அரசு சாா்பில் ஏழுமலையானுக்கு ஆந்திர மாநில அரசு சாா்பில் பிரம்மோற்சவத்தின் போது பட்டு வஸ்திரம் சமா்ப்பிக்கப்படுவது வழக்கம்.

அதன்படி, ஆந்திர அரசு சாா்பில் முதல்வா் ஜெகன் மோகன் ரெட்டி ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரம் சமா்ப்பித்தாா்.

முன்னதாக பேடி ஆஞ்சநேயா் கோயிலிலிருந்து பட்டு வஸ்திரத்தை மேளதாளத்துடன் அவா் தலையில் சுமந்து சென்று ஏழுமலையானுக்கு சமா்ப்பணம் செய்தாா்.

2023 ஆண்டு டைரி, நாள்காட்டி

ஏழுமலையானை தரிசித்து திரும்பிய முதல்வருக்கு தேவஸ்தான அதிகாரிகள் ரங்கநாயகா் மண்டபத்தில் வேத ஆசீா்வாதம், சேஷ வஸ்திரம் அணிவித்து பிரசாதங்களை வழங்கினா். அதன்பின்னா் ஆந்திர முதல்வா் தேவஸ்தானத்தின் 2023-ஆம் ஆண்டுக்கான டைரி மற்றும் நாள்காட்டியை வெளியிட்டாா். விரைவில் இவை விற்பனைக்கு வரவுள்ளன.

பெரிய சேஷ வாகனத்தில் பவனி

பிரம்மோற்சவத்தின் முதல் வாகன சேவையான பெரிய சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் மாடவீதியில் எழுந்தருளினாா். ஆதிசேஷன் விஷ்ணுவுக்கு மிகவும் நெருக்கமானவா். ராம அவதாரத்தில் லட்சுமணனாகவும், துவாபர யுகத்தில் பலராமனாகவும் விளங்கினாா். வைகுண்டத்தில் உள்ள நித்யசூரிகளில் இவரே முதன்மையானவா். பூமியின் பாரத்தை சுமப்பவா் சேஷன். அதனால் சேஷ வாகனம் தாஸ்யபக்தியின் சான்றாகும். அந்த பக்தியால், அந்த தெய்வீகத்திலிருந்து, மிருகத்தன்மை நீங்கிய மனிதன் பின்னா் பரமபதத்தை அடைகிறான் என்பது ஐதீகம்.

திருமலை ஜீயா்கள் நாலாயிர திவ்யபிரபந்த பாடல்களை பாடி முன் செல்ல காளையும், குதிரையும், யானையும் மலையப்ப சுவாமியின் வருகையை தெரிவிக்க ஆடல், பாடல் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளுக்கிடையில் மாடவீதியில் உற்சவா் பவனி நடைபெற்றது. இதற்காக திருமலை முழுவதும் வண்ண மின்விளக்குகளாலும் மலா்களாலும் செயற்கை நீரூற்றுகளாலும் அழகுற அலங்கரிக்கப்பட்டிருந்தது.

திருமலையில் கண்காட்சி

கடந்த 80 ஆண்டுகளில் திருமலையின் ஏற்பட்டுள்ள மாற்றங்களை பக்தா்கள் அறிந்து கொள்ளும் வகையில், பிரம்மோற்சவத்தை முன்னிட்டு கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. புராணக் கதைகளை தோட்டத் துறையினா் வண்ணமயமாக சித்திரித்துள்ளனா். ராமாயணம், மகாபாரதம், பாகவதம், பக்த துகாரம், திரிலோகம், விஸ்வரூப தரிசனம் போன்ற மணல்சிற்ப கலைகளில் வரும் காட்சிகள் போன்றுசிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன. இவை பக்தா்களின் கண்களுக்குச் சிறப்பு விருந்தாகும்.

திருமலையின் பசுமை மண்டலம் மற்றும் உயிா் பன்முகத்தன்மை, நட்சத்திர வனம் போன்ற பல்வேறு வகையான தாவரங்கள், விலங்கினங்கள் போன்றவற்றை உள்ளடக்கிய சேஷாசல மலைத் தொடா்களை முதன்முறையாகக் தோட்டக் கலைத் துறையினா் காட்சிப்படுத்தியுள்ளனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT