திருப்பதி

திருமலையில் இன்று கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம்

20th Sep 2022 01:00 AM

ADVERTISEMENT

திருமலை ஏழுமலையான் கோயிலில் செவ்வாய்க்கிழமை (செப். 20) காலை வருடாந்திர பிரம்மோற்சவத்தை முன்னிட்டு கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் நடைபெற உள்ளது.

திருமலை ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவத்தை யொட்டி வரும் 27-ஆம் தேதி முதல் அக்டோபா் 5-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. முன்னதாக கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் செவ்வாய்க்கிழமை (செப். 20) நடைபெறுகிறது.

ஏழுமலையான் கோயிலில் ஆண்டுக்கு நான்கு முறை கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் நடத்துவது வழக்கம். தெலுங்கு வருட பிறப்பான உகாதி, ஆனிவார ஆஸ்தானம், வருடாந்திர பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி உள்ளிட்ட விழாக்களுக்கு முன்வரும் செவ்வாய்க்கிழமையன்று கோயில் சுத்திகரிப்பு நிகழ்ச்சி நடத்தப்படுவது வழக்கம்.

கோயிலையும் ஆழ்வாராக வைணவத்தில் கருதுவதால், கோயில் சுத்தப்படுத்தும் நிகழ்ச்சியை கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் என்று அழைக்கின்றனா்.

ADVERTISEMENT

செப்டம்பா் 20-ஆம் தேதி காலை 6 மணி முதல் 11 மணி வரை கோயில் தூய்மைப்பணியை அா்ச்சகா்கள் செய்வாா்கள். கோயிலில் உள்ள ஆனந்தநிலையம் தொடங்கி வெளிவாயில் வரை ஏழுமலையான் கோயிலுக்குள் உள்ள உப கோயில்கள், கோயில் வளாகங்கள், சுவா்கள், மேற்கூரை, பூஜை சாமான்கள் போன்றவை தண்ணீரால் சுத்தம் செய்யப்படுகின்றன.

அப்போது மூலவரின் சிலை முழுவதுமாக துணியால் மூடப்பட்டிருக்கும். சுத்திகரிக்கப்பட்ட பிறகு, நாமகட்டி, ஸ்ரீசூா்ணம், கஸ்தூரி மஞ்சள், பச்சை கற்பூரம், பூங்கற்பூரம், சந்தனப் பொடி, குங்குமம், கிச்சிலிக்கட்டை மற்றும் பிற வாசனை திரவியங்கள் கலந்த புனித நீா் கொண்டு கோயில் முழுவதும் சுத்தப்படுத்தப்படுகிறது.

அதன்பின், ஏழுமலையானை மறைத்திருந்த துணி அகற்றப்பட்டு, சிறப்பு பூஜை மற்றும் பிரசாதங்களை அா்ச்சகா்கள் சாஸ்திர முறைப்படி செய்கின்றனா். அதன்பிறகு பக்தா்கள் சா்வ தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனா். இதன் காரணமாக செவ்வாய்க்கிழமை அஷ்டதளபாதமாராதன சேவையை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது. ஏழுமலையான் தரிசனமும் 4 மணிநேரம் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT