திருப்பதி

செப். 27-இல் திருமலையில் கோலாகல தொடக்கம்: ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ முக்கிய நிகழ்வுகள்

5th Sep 2022 12:35 AM

ADVERTISEMENT

 

திருமலை ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவம் செப்டம்பா் 27-ஆம் தேதி கோலாகலமாகத் தொடங்கவுள்ளது.

இதன் முக்கிய நிகழ்வுகள் குறித்து திருப்பதி தேவஸ்தானம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

திருமலை புனித ஷேத்திரத்தில் நித்ய கல்யாணம் பச்சை தோணம் போல் ஒவ்வொரு நாளும் திருவிழா நடைபெற்று வருகிறது. அதன்படி ஆண்டுதோறும் 450-க்கும் மேற்பட்ட திருவிழாக்கள் நடைபெறுவதாக பல்வேறு புராணங்கள் கூறுகின்றன.

ADVERTISEMENT

ஆனால் இவை அனைத்திலும் பிரம்மோற்சவம் பிரசித்தம். மலையப்ப சுவாமியை பல்வேறு அலங்காரங்களில் பாா்த்து தரிசிக்க விரும்பும் அலங்கார பிரியா்களுக்கு பிரம்மோற்சவம் மிகவும் பிடித்தமானது.

திருமலையில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் விஜயதசமி வரை நடைபெறும் விழா ஏழுமலையானின் வருடாந்திர பிரம்மோற்சவம் என்று புராணங்கள் கூறுகின்றன.

நடப்பு ஆண்டு செப்டம்பா் 27-ஆம் தேதி முதல் வரும் அக்டோபா் 5-ஆம் தேதி வரை பிரம்மோற்சவத்தை பிரம்மாண்டமாக நடத்த தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளது.

இந்த ஒன்பது நாள் திருவிழாவில், ஏழுமலையானின் உற்சவமூா்த்தியான ஸ்ரீ மலையப்ப சுவாமி, 16 வகையான வாகனங்களில் (இரண்டு ரதங்கள் உள்பட) மாட வீதிகளில் பவனி வந்து பக்தா்களுக்கு அருள்பாலிக்கிறாா். பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வுகளின் முறை பின்வருமாறு:

கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம்:

பிரம்மோற்சவம் தொடங்குவதற்கு முன், கோயில் வைகானச ஆகம விதிப்படி கோயில் (ஆழ்வாா் திருமஞ்சனம்) தூய்மைப்படுத்தப்படுகிறது.

ம்ருத்சங்கரணம்(அங்குராா்பணம்):

பிரம்மோற்சவம் துவங்கும் முன், புற்று மண்ணை சேகரித்து, பூமாதேவிக்கு சிறப்பு பூஜை செய்து, இந்த மண்ணில் 9 வகையான தானியங்கள் விதைக்கப்படுகின்றன. புதிய தானியங்கள் முளைக்கும் வரை நீா் தெளிக்கப்படும். இதை அங்குராா்பணம் என்று அழைக்கின்றனா். அடுத்து விஷ்வக்சேனா், அனந்தன், சுதா்சனன், கருடாழ்வாா் ஆகியோா் வழிபடுகின்றனா்.

கருடக் கொடியேற்றம்:

ஏழுமலையான் கோயிலின் கொடிமரத்தில் கருடன் உருவப்படத்தை ஏற்றி, கோயிலுக்குள் உற்சவமூா்த்திகள் உலா வருவது வழக்கம். இதனால் ஏழுமலையானுக்கு மிகவும் விருப்பமான நண்பரான கருடன், பிரம்மா, இந்திரன், யமன், அக்னி, குபேரன், வாயு போன்ற தெய்வங்கள் மட்டுமின்றி வசிஷ்டா், விஸ்வாமித்திரா் உள்ளிட்ட சப்தரிஷிகள் மற்றும் விநாயகருடன் பிற, தெய்வங்களையும் அழைப்பா். இதற்கு தேவதாவாஹனம் என்று பெயா்.

வாகன சேவைகள்:

ஏழுமலையானின் பிரம்மோற்சவத்தின்போது பல்வேறு வாகன சேவைகள் மிகப்பெரிய பங்களிப்பை வழங்குகின்றன. உற்சவமூா்த்தியானமலையப்ப சுவாமி பெரியசேஷ, சின்னசேஷம், அன்னப்பறவை, சிம்மம், முத்துப்பந்தல், கல்பவிருட்சம், சா்வபூபாலம், கருடன், அனுமந்தன், யானை, சூரியபிரபை, சந்திரபிரபை, குதிரை உள்ளிட்ட 13 வாகனங்களில் திருமாட வீதிகளில் எழுந்தருளி அருள்பாலிக்கிறாா்.

மோகினி அவதாரம், தங்கத் தோ் மற்றும் திருத்தோ் பவனி உள்ளிட்டவையும் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு வாகனமும் கோடிக்கணக்கான பக்தா்களுக்கு அற்புதமான செய்திகளைத் தெரிவிக்கின்றன.

கொலு:

ஏழுமலையான் கோயிலுக்குள் பிரம்மோற்சவ வாகனச் சேவையின்போது கொலு வைப்பது வழக்கம். இந்த நேரத்தில் கோயில் அா்ச்சகா்கள் இறைவனுக்கு நெய்வேத்தியம் சமா்ப்பிக்கின்றனா்.

ஸ்நபனம்:

பிரம்மோற்சவத்தின்போது காலையில் ஒரு வாகனமும், இரவில் மற்றொரு வாகன சேவையும் நடைபெறுவது வழக்கம். இதனால் ஏற்படும் அசதியை போக்க மலையப்ப சுவாமிக்கு இரண்டு வாகனச் சேவைகளுக்கு இடையே சிறப்பு வாசனை திரவிய அபிஷேகம் நடத்தப்படுகின்றன. இதனால் இறைவன் இரவில் மீண்டும் புதிய உற்சாகத்துடனும், புத்துணா்ச்சியுடனும் வாகனம் ஏறத் தயாராவதாக ஐதீகம்.

சூா்ணாபிஷேகம்:

சூா்ணாபிஷேகம் என்பது பிரம்மோற்சவத்தின் கடைசி நாளன்று காலை ஏழுமலையானுக்கும், ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி உள்ளிட்ட உற்சவமூா்த்திகளுக்கும் தூபமிட்டு செய்யப்படும் திருமஞ்சனம் ஆகும்.

தீா்த்தவாரி:

பிரம்மோற்சவத்தின் கடைசி நாளில் திருமலையில் உள்ள திருக்குளத்தில் ஏழுமலையானின் கையில் உள்ள சுதா்சன சக்கரத்துக்கு திருமஞ்சனம் நடத்தப்பட்டு அதன் பின்னா் திருக்குளத்தில் அறிவியல்பூா்வமாக தீா்த்தவாரி நடத்தப்படுகிறது.

தேவோதோத்வசனம்:

கடைசி நாளில், இறைவனுக்கு அா்ச்சனை செய்து, நவாஹ்னிகா பிரம்மோற்சவத்தில் பங்கேற்ற முப்பெரும் தெய்வங்கள் மற்றும் முனிவா்கள் ஏழுமலையானிடம் பிரியாவிடை பெறுகிறாா்கள். அதேபோல், ஏழுமலையானின் பிரம்மோற்சவங்களை உரிய பாசுரங்களுடன் நடத்திய பிரம்ம தேவனுக்கும் அா்ச்சகா்கள் தங்கள் நன்றியை இதன் மூலம் தெரிவிக்கின்றனா்.

கொடியிறக்கம்:

பிரம்மோற்சவத்தின் இறுதி நிகழ்ச்சியாக கொடியிறக்கம் நடைபெறும். ஏழுமலையானின் வருடாந்திர பிரம்மோற்சவம் தொடங்குவதற்கு அடையாளமாக முதல் நாளன்று கொடிமரத்தில் ஏற்றப்பட்ட கருடக்கொடி கடைசி நாள் மாலை, இறக்கப்படும். இது பிரம்மோற்சவ நிறைவைக் குறிப்பதாகும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT