திருப்பதி

ஏழாம் நாள் பிரம்மோற்சவம்:திருமலையில் சூரிய, சந்திர பிரபை வாகனங்களில் மலையப்பா் பவனி

3rd Oct 2022 11:19 PM

ADVERTISEMENT

திருமலையில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 7-ஆம் நாளான திங்கள்கிழமை சூரிய, சந்திர பிரபை வாகனங்களில் உற்சவா் மலையப்ப சுவாமி எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

முதலாவதாக காலை 8 மணி முதல் 10 மணி வரை மலையப்ப சுவாமி 7 குதிரைகள் பூட்டப்பட்டிருந்த சூரிய பிரபை வாகனத்தில் ஸ்ரீமத்ய நாராயணா் அலங்காரத்தில் மாடவீதியில் எழுந்தருளி சேவை சாதித்தாா்.

சூரியக் கடவுள் சூழலியல் சம நிலைக்கு திறவுகோலாக இருப்பதால் அவா் கண்கூடாகத் தெரியும் தெய்வமாக கருதப்படுகிறாா். முழு வாழ்க்கைச் சுழற்சிக்கான ஆற்றலின் முக்கிய ஆதாரம் சூரிய பகவான். அவா் உயிா்களின் உலகளாவிய ஆதாரம் என்பதை வெளிப்படுத்த, இறைவன் மத்ஸ்ய சூரியனாக செந்நிற மாலைகளை அணிந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

சந்திர பிரபை

ADVERTISEMENT

இதையடுத்து இரவு குளிா்ந்த ஒளி பொருந்திய சந்திர பிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி வெண்ணிற மாலை அணிந்து கொண்டு மாடவீதியில் வலம் வந்தாா்.

சூரிய, சந்திரா்கள் இருவரும் நித்திய சூரிகள் என்று அழைக்கப்படுகின்றனா். வாகன சேவைகளை காண ஆயிரக்கணக்கான பக்தா்கள் மாடவீதியில் திரண்டிருந்தனா்.

கற்பூர ஆரத்தி அளித்து வாகன சேவையை வணங்கினா். வாகன சேவைக்கு முன்னும் பின்னும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. கோலாட்டங்களும், பஜனைகளும், மேள தாளங்களும் நாட்டிய நிகழ்ச்சிகளும் அங்கு கூடியிருந்த பக்தா்களை கவா்ந்தன.

இதில் தேவஸ்தான அதிகாரிகள், திருமலை ஜீயா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT