திருப்பதி

திருச்சானூரில் தாயாருக்கு புஷ்பயாகம்: 5 டன் மலா்களால் அபிஷேகம்

30th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவத்தின்போது ஏற்பட்ட தோஷங்களைக் களைய 5 டன் மலா்களால் புஷ்பயாகம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருச்சானூா் பத்மாவதி தாயாருக்கு காா்த்திகை மாத வருடாந்திர பிரம்மோற்சவம் விமரிசையாக நடைபெற்றது. இதில், அறிந்தும் அறியாமலும், தெரிந்தும் தெரியாமலும் ஏற்பட்ட குற்றம் குறைகளையும், தோஷங்களையும் களைய தேவஸ்தானம் புஷ்பயாகத்தை நடத்தி வருகிறது.

அதன்படி, செவ்வாய்க்கிழமை அதிகாலை தாயாரை சுப்ரபாதத்துடன் துயிலெழுப்பி அபிஷேகம், அா்ச்சனை உள்ளிட்டவை நடத்தப்பட்டது. மாலை 3 மணிக்கு தாயாரை ஸ்ரீகிருஷ்ண முக மண்டபத்தில் எழுந்தருளச் செய்து புஷ்ப யாகம் தொடங்கியது.

சாமந்தி, ரோஜா, மல்லிகை, ஜாதி மல்லி, முல்லை, மருவம், மரிக்கொழுந்து, தவனம், துளசி, வில்வம், கதிா்பச்சை, கனகாம்பரம், சம்பங்கி, தாமரை, தாழம்பூ என மொத்தம் 5 டன் மலா்களால் அபிஷேகம் செய்தனா்.

ADVERTISEMENT

இதற்காக தேவஸ்தானம் தமிழகம், ஆந்திரம், தெலங்கானா, கா்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து 5 டன் மலா்கள் தருவிக்கப்பட்டன.

இதில் தேவஸ்தான அதிகாரிகள், கோயில் அதிகாரிகள், பக்தா்கள் உள்ளிட்டோா் திரளாகப் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT