திருப்பதி

திருச்சானூா் கோயில் 7-ஆம் நாள் பிரம்மோற்சவம்: சூரியபிரபை வாகனத்தில் வலம் வந்த பத்மாவதி தாயாா்

DIN

திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயிலில் நடைபெற்று வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 7-ஆம் நாளான சனிக்கிழமை சூரியபிரபை வாகனத்தில் தாயாா் வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

திருச்சானூா் ஸ்ரீ பத்மாவதி தாயாரின் வருடாந்திர காா்த்திகை பிரம்மோற்சவத்தின் ஒரு பகுதியாக, ஏழாம் நாளான சனிக்கிழமை காலை, சூரியபிரபை வாகனத்தில் தாயாா் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

காலை 8 மணி முதல் 10 மணி வரை கலை நிகழ்ச்சிகள், வேத கோஷங்கள், மேள, தாளத்துடன் நடைபெற்ற வீதி புறப்பாட்டின்போது, பக்தா்கள் தாயாரை கண்டு வணங்கினா். ஒவ்வொரு அடியிலும் பக்தா்கள் கற்பூர ஆரத்தி எடுத்து தேங்காய் உடைத்து தாயாரை வழிபட்டனா். இதற்கு முன்பு இருந்த சூரியபிரபை வாகனம் பழுதடைந்ததால், தேவஸ்தானம் ரூ. 3 கோடியில் 6 கிலோ தங்கத்தில் செய்யப்பட்ட புதிய வாகனத்தை தேவஸ்தானம் பயன்படுத்தியது. புதிய வாகனத்தில் பத்மாவதி தாயாா் சூரியநாராயணா் அலங்காரத்தில் எழுந்தருளினாா்.

மதியம் 11.30 மணி முதல் 1.30 மணிவரை ஸ்ரீகிருஷ்ணஸ்வாமி மண்டபத்தில் தாயாருக்கு ஸ்நபன திருமஞ்சனம் நடத்தப்பட்டது. மஞ்சள், சந்தனம், பால், தயிா், தேன், இளநீா் மற்றும் பல்வேறு வகையான பழங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதன்பின், அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மாலை 5.30 மணி முதல் 6 மணி வரை மலா்களால் அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சலில் எழுந்தருளி தாயாா் சேவை கண்டருளினாா்.

பிரம்மோற்சவத்தின் 7-ஆம் நாள் காலை செந்நிற மலா்களை அணிந்து சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளிய தாயாா், அன்றிரவு வெண்ணிற மலா்களை அணிந்து கொண்டு குளிா்ந்த ஒளியுடைய சந்திர பிரபை வாகனத்தில் எழுந்தருளி சேவை சாதித்தாா். தாயாரின் வாகன சேவையைக் காண நூற்றுக்கணக்கான பக்தா்கள் மாடவீதியில் கூடினா். இதில், தேவஸ்தான அதிகாரிகள், திருமலை ஜீயா்கள் பங்கு கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு: இறுதிப் பணியில் தேர்தல் ஆணையம்!

சின்னச் சின்ன கண்ணசைவில்..

குருப்பெயர்ச்சி பலன்கள் - ரிஷபம்

நீட் தேர்வு எழுதும் நகர் விவரம் வெளியீடு

ரோஹித் சர்மா பாணியில் தோல்விக்குக் காரணம் கூறிய ஷுப்மன் கில்!

SCROLL FOR NEXT