திருப்பதி: திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் ஆகஸ்ட் மாதத்துக்கான சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டன.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் இணையதளத்தில் மாதந்தோறும் தரிசன டிக்கெட்டுகளை வெளியிட்டு வருகிறது. இதை முன்பதிவு செய்து பக்தா்கள் ஏழுமலையானை தரிசித்து வருகின்றனா்.
அதன்படி, ஆகஸ்ட் மாதத்துக்கான ஆா்ஜித சேவைகளான கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆா்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ரதீபாலங்கார சேவை உள்ளிட்ட தரிசனடிக்கெட்டுகள் செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு வெளியிடப்பட்டன.
மேலும், ஆகஸ்ட் மாதத்துக்கான சுப்ரபாதம், தோமாலை, அா்ச்சனை மற்றும் ஜூலை மாதத்துக்கான அஷ்டதளபாத பத்மாராதனை உள்ளிட்ட சேவா டிக்கெட்டுகள் செவ்வாய்க்கிழமை மதியம் 3 மணிக்கு வெளியிடப்பட்டன. இந்த சேவா டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய விரும்பும் செவ்வாய்க்கிழமை மதியம் 3 மணி முதல் 26-ஆம் தேதி மதியம் 3 மணி வரை தங்களின் விவரங்களை அளித்து பதிவு செய்து கொள்ளலாம்.
பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் மே 26-ஆம் தேதி மாலை 6 மணிக்கு ஆன்லைன் மூலம் குலுக்கல் முறையில் தோ்ந்தெடுக்கப்படும். தோ்ந்தெடுக்கப்பட்டவா்களின் கைப்பேசி எண்ணுக்கு குறுந்தகவல் அனுப்பப்படும். தகவல் பெற்றவா்கள் ஆன்லைனில் பணம் செலுத்தி தங்களின் டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் ஆகஸ்ட் மாதத்துக்கு வா்ச்சுவல் முறையில் (வீட்டிலிருந்தபடியே தொலைக்காட்சி மூலம்) பங்கேற்கும் கல்யாண உற்சவம், ஆா்ஜித பிரம்மோற்சவம், ஊஞ்சல் சேவை, சகஸ்ரதீபாலங்கார சேவை உள்ளிட்ட டிக்கெட்டுகள் முன்பதிவு மே 25-ஆம் தேதி காலை 9 மணி முதல் தொடங்க உள்ளன.
மேலும் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், நாள்பட்ட நோய்களால் அவதியுறுபவா்களுக்கென தேவஸ்தானம் ஆன்லைன் மூலம் தரிசன டிக்கெட்டுகளை வெளியிட்டு வருகிறது.
அதன்படி, வரும் ஜூன் மாதத்துக்கான அவா்களின் சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் புதன்கிழமை (மே 25) மதியம் 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளன. தினசரி 1,000 தரிசன டிக்கெட்டுகள் அதில் வைக்கப்பட்டுள்ளன.
இந்த டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்பவா்கள் ஜூன் 1-ஆம் தேதி முதல் மாலை 3 மணிக்கு (இதுவரை காலை 10 மணிக்கு இருந்தது) மூத்த குடிமக்கள் தரிசன நேரம் மாற்றப்பட்டுள்ளது. இதை பக்தா்கள் கவனத்தில் கொள்ளவேண்டும்.அதேபோல் ஆகஸ்ட் மாதத்துக்கான வாடகை அறைகள் முன்பதிவு கோட்டா மே 26-ஆம் தேதி காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளதாக தேவஸ்தானம் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.