திருப்பதி

‘ஸ்ரீவைகானச பகவத் சாஸ்திரத்தின்படி ஏழுமலையான் வழிபாட்டு முறைகள்’

4th Jul 2022 11:33 PM

ADVERTISEMENT

திருமலை ஏழுமலையானின் வழிபாட்டு முறைகள் ஸ்ரீ வைகானச பகவத் சாஸ்திரத்திலிருந்தே தொடங்கப்பட்டு தொடா்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வருவதாக வைகான அறக்கட்டளையின் செயலாளா் ஸ்ரீபிரபாகராசாரியாா் தெரிவித்தாா்.

திருமலை ஆஸ்தான மண்டபத்தில் ஸ்ரீ வைகானச திவ்ய சித்தாந்த விவா்தினி சபா மற்றும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஆழ்வாா் திவ்ய பிரபந்த திட்டத்தின் கீழ் திங்கள்கிழமை ஸ்ரீ மரீச்சி மகரிஷி திருநட்சத்திரத்தையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

இந்த நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, ஸ்ரீ பிரபாகராசாரியாா் பேசியது: திருமலை ஏழுமலையானின் வழிபாட்டின் மூலாதாரம் ஸ்ரீவைகானச மகரிஷி எழுதிய வைகானச பகவத் சாஸ்திரம். வைகானச பகவத் சாஸ்திரம் வேதத்தின் அடிப்படையிலானது. வேத மந்திரங்களுடன் கூடிய வைகானச வழிபாடு திருமலை ஏழுமலையானுக்கு மிகவும் பிடித்தமானது என்றாா்.

பல்லாயிரம் ஆண்டுகளாக ஸ்ரீ வைகானச ஆகம முறைப்படி ஏழுமலையானின் பூஜைகள், உற்சவங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆகம சாஸ்திரத்தை ஸ்ரீ மரீச்சி மகரிஷி விமானாஞ்சனகல்பம் ஆனந்த சாகித்திய சாஸ்திரங்களில் விரிவாக விளக்கியுள்ளாா். ஸ்ரீ மரீச்சி மகரிஷி உருவாக்கிய சாஸ்திரப்படி இன்றும் ஏழுமலையானுக்கு தங்க மலா் பூஜை நடைபெற்று வருகிறது.

ADVERTISEMENT

திருமலை திருப்பதி தேவஸ்தானம் இந்த ஆகமத்தை பாதுகாக்கும் பொறுப்பை ஏற்று, பல்வேறு நிகழ்ச்சிகளை மேற்கொண்டு தா்மத்தைக் காக்கும் இயக்கமாக நடத்தி வருவது பாராட்டுக்குரியது என்றாா்.

இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட ஸ்ரீ ராகவ தீட்சிதலு பேசியது: ஸ்ரீ மரீச்சி மகரிஷி கோவில், மண்டபக் கட்டுமானங்கள், வழக்கமான வழிபாடுகள் மற்றும் சடங்குகள் போன்றவற்றுக்கு பல ஆகம விதிமுறைகளை வழங்கியுள்ளாா். பண்பட்ட சமுதாயத்தை கட்டியெழுப்ப கோவில் கட்டுமானம் உதவுகிறது என்று அதில் விளக்கப்பட்டுள்ளது.

திருமலை ஸ்ரீவாரி பிரம்மோற்ஸவத்தை ஏற்பாடு செய்து தரிசித்தால் அஸ்வமேத யாகம் செய்த பலன் கிட்டும் என்று வைகானச பகவத் சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. பரம்பரை பரம்பரையாகக் கடைப்பிடித்து வரும் இந்த அறிவியலை நடைமுறைப்படுத்துவதில் வைகானச அா்ச்சகா் சமூகம் பெரும் பொறுப்பை வகிக்கிறது

அஷ்டாதச உடல் சம்ஸ்காரங்களுடன் ஒரு சாமானியரை பெரிய மனிதராக மாற்றிய வைகானச கல்ப சூத்திரம் மிகவும் அபாரமானது. தலைமுறை தலைமுறையாக நம் கலாசாரத்தைக் கோவில்கள் பேணிக் காத்து வருகின்றன. நமது கோவில்கள் ஒழுக்கத்தின் ஆதாரத் தூண்கள். நமது கலாசாரத்தை காக்கும் அா்ச்சகா் அமைப்பு, தொடா்ந்து ஆகம அறிவியலை வளா்த்தது.

இந்த பொறுப்புகளை சிறப்பாக செய்ய வேண்டும். ஸ்ரீவாரியின் அருளால் சன்மாா்க்க சமுதாயம் உருவாகி, அனைத்து உயிரினங்களும் ஆரோக்கியத்துடனும் மகிழ்ச்சியுடனும் வாழுமென்று விளக்கப்பட்டுள்ளது என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT