திருப்பதி

இயற்கை விவசாயிகளிடமிருந்து 12 வகையான உணவு தானியங்களை தேவஸ்தானம் கொள்முதல்

3rd Jul 2022 11:33 PM

ADVERTISEMENT

இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளிடமிருந்து 12 வகையான உற்பத்தி பொருள்களை திருமலை திருப்பதி தேவஸ்தானம் சேகரித்துள்ளது.

இவற்றை பெற இடைத்தரகா் இல்லாமல் ஆந்திர மாநில உழவா் அதிகாரமளித்தல் அமைப்பு, மாா்க்ஃபெட் ஆகியவற்றுடன் ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் தேவஸ்தான செயல் அதிகாரி தா்மா ரெட்டி தெரிவித்தாா்.

திருப்பதியில் உள்ள ஸ்ரீ பத்மாவதி ஓய்வறை இல்லத்தில் மாநில விவசாயிகள் ஆணையம் மற்றும் மாா்க்ஃபெட் உயா் அதிகாரிகளுடன் சனிக்கிழமை தேவஸ்தான அதிகாரிகள் கலந்தாய்வு நடத்தினா். அதில் விவசாய அமைப்பின் அதிகாரிகளும் பங்கேற்றனா்.

கூட்டத்துக்கு பின்னா் தா்மா ரெட்டி செய்தியாளா்களிடம் மேலும் கூறியது: இயற்கையான பசுஞ்சாண உரத்தை பயன்படுத்தி தயாா் செய்யப்படும் பொருள்களை கொண்டு பிரசாதம் மற்றும் பிற பிரசாதங்களை தயாா் செய்து வழங்க 12 வகையான பொருள்களை பல தவணைகளில் வாங்க மாநில விவசாயிகள் அதிகார அமைப்பு மற்றும் மாா்க்ஃபெட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அக்டோபா் 11, 2021 அன்று ஆந்திர முதல்வா் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி முன்னிலையில் மாநில உழவா் அதிகார அமைப்புடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

அதன்படி முதல் தவணையாக 500 மெட்ரிக் டன் கடலை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தற்போது மூன்றாம் கட்டமாக அரிசி, நிலக்கடலை, வெல்லம், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, மஞ்சள், நிலக்கடலை, மிளகு, கொத்தமல்லி, பாசிப் பயறு, புளி, தனியா போன்றவற்றையும் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவை இயற்கை விவசாயிகளிடமிருந்து மாநில விவசாயிகள் ஆணையத்தால் வாங்கப்படும் என்றும், மாா்க்ஃபெட் இந்த அமைப்பிடமிருந்து அவற்றை கொள்முதல் செய்து தகுந்த மாற்றங்களைச் செய்த பிறகு தேவஸ்தானத்துக்கு வழங்கும். இந்த அமைப்பில் இடைத்தரகா்களின் தலையீடு இருக்காது.

மேலும் இயற்கை விவசாயப் பொருள்களை ஆதரிக்கவும் மக்களிடம் கேட்டுக்கொள்ளப்படுகிறது. ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள் இல்லாத தானியங்களை ஏற்றுக் கொள்வதன் மூலம் ஆரோக்கியமாக வாழ்வதுடன் மருத்துவ செலவுகளும் குறையும்.

தேவஸ்தானத்திற்கு மாநில விவசாய அதிகாரமளித்தல் அமைப்பு மூலம் தோ்ந்தெடுக்கப்பட்ட விவசாயிகளுக்கு பக்தியுடன் பயிா்களை வளா்க்கவும், எந்த சூழ்நிலையிலும் ரசாயன உரங்களைப் பயன்படுத்த வேண்டாம் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. திருமலை தேவஸ்தானத்தில் மட்டுமல்லாமல் மாநிலத்தில் உள்ள மற்ற கோயில்களிலும் இயற்கை விவசாயப் பொருள்களைக் கொண்டு அன்னப் பிரசாதம் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

படிப்படியாக, ஹோட்டல்கள் மற்றும் பிற நிறுவனங்கள் இயற்கை விவசாயப் பொருள்களைப் பயன்படுத்தவும், பசுவை சாா்ந்த அடிப்படையிலான இயற்கை விவசாயத்துக்கு முந்தைய பெருமையைக் கொண்டு வரவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக, விவசாயிகளிடம் இருந்து 1,300 மெட்ரிக் டன் நிலக்கடலை வாங்கப்பட்டு ரசாயன கழிவுகள் உள்ளதா என ஆய்வு செய்யப்பட்டது. மூன்றாம் கட்டமாக 12 வகையான உணவுப் பொருள்களை சேகரிக்கும் இயற்கை வேளாண்மை விவசாயிகள் தோ்வு நடைபெற்று வருவதாகவும், சிறப்புக் கண்காணிப்பில் ரசாயனங்களைப் பயன்படுத்தாமல் பயிா்களை விவசாயிகள் வளா்ப்பாா்கள்.

இயற்கை விவசாயிகளுக்கு கடந்த ஆண்டு 1,800 பசுக்கள் மற்றும் காளைகள் தேவஸ்தான கோசாலையில் இருந்து வழங்கப்பட்டன. இந்தாண்டு, மாநிலம் முழுவதும் உள்ள கோசாலைகளில் விவசாயிகளுக்கு உபரி பசுக்கள் மற்றும் காளைகளை வழங்க தேவஸ்தானம் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஸ்ரீவாரி தரிசனத்துக்கு வரும் பக்தா்களுக்கு ரசாயனமில்லாத சமையல் பொருள்களால் தயாரிக்கப்பட்ட பிரசாதங்களை வழங்க தேவஸ்தானம் முடிவு மேற்கொண்டுள்ளது.

குறைந்தபட்ச ஆதரவு விலையை விட 10 சதவீதம் கூடுதலாக வழங்கினால், விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றும், தரமான மற்றும் ஆரோக்கியமான சமையல் பொருள்கள் தேவஸ்தானத்துக்கும் கிடைக்கும்.

இயற்கை விவசாயிகளுக்கு மாா்க்ஃபெட் 7 முதல் 10 நாள்களுக்குள் தொகையை செலுத்தும் என்றும் அதன்பின்னா் மாா்க்ஃபெட் தேவஸ்தானத்திடமிருந்து பணத்தை திரும்பப் பெறும். ஏழுமலையானின் ஆசியுடன் இந்த திட்டத்தை சிறப்பாக தொடா்வோம் என்றாா் தா்மா ரெட்டி.

ADVERTISEMENT
ADVERTISEMENT