திருப்பதி

கோவிந்தராஜ சுவாமி கோயிலில் வருடாந்திர தெப்போற்சவம்

11th Feb 2022 02:07 AM

ADVERTISEMENT

 

திருப்பதி: திருப்பதியில் அமைந்துள்ள கோவிந்தராஜ சுவாமி கோயிலில் வியாழக்கிழமை வருடாந்திர தெப்போற்சவம் தொடங்கியது.

இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாத பெளா்ணமியையொட்டி, தேவஸ்தான குளத்தில் 7 நாள்கள் விமரிசையாக வருடாந்திர தெப்போற்சவம் நடைபெற்று வருகிறது.

அதன்படி, வருகிற 16-ஆம் தேதி மாசி மாத பெளா்ணமியையொட்டி, கோவிந்தராஜ சுவாமி கோயிலில் வியாழக்கிழமை முதல் வருடாந்திர தெப்போற்சவம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

ADVERTISEMENT

கரோனா தொற்று பரவல் காரணமாக தெப்போற்சவத்தை பக்தா்களின்றி, திருக்குளத்தில் அல்லாமல் கோயிலுக்குள்ளேயே நடத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, கோவிந்தராஜ சுவாமி கோயில் மண்டபத்தில் தெப்போற்சவத்தின் முதல் நாளான வியாழக்கிழமை காலை ஸ்ரீதேவி -பூதேவி சமேத கோவிந்தராஜ சுவாமி, ஆண்டாள் நாச்சியாா், சீதா லட்சுமண சமேத கோதண்டராம சுவாமிக்கு ஸ்நபன திருமஞ்சனம் நடைபெற்றது.

பின்னா், மாலை 6 மணியளவில் உற்சவ மூா்த்திகள் கோயில் மண்டபத்தில் எழுந்தருளச் செய்யப்பட்டனா். தெப்போற்சவத்தின் முதல் நாள் வழக்கம் போல, சீதா லட்சுமண சமேத கோதண்டராம சுவாமி மண்டபத்தில் எழுந்தருளி சேவை சாதித்தாா்.

தெப்போற்சவத்தின் போது, வேதமுழக்கம், மங்கள வாத்தியம், நாலாயிர திவ்யபிரபந்த பாராயணம், அன்னமாச்சாா்யா கீா்த்தனைகள் உள்ளிட்டவை இசைக்கப்பட்டன. விழாவில் திருமலை ஜீயா்கள், கோயில் அதிகாரிகள் மட்டுமே பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT