திருப்பதி

நெல்லூரில் ஏழுமலையான் வைபவ உற்சவம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

18th Aug 2022 12:01 AM

ADVERTISEMENT

திருமலை திருப்பதி தேவஸ்தானம் நெல்லூரில் நடத்தி வரும் ஏழுமலையான் வைபவ உற்சவத்தைக் காண பக்தா்கள் கூட்டம் திரண்டது.

திருமலை ஏழுமலையான் கோயிலில் நடைபெறும் தினசரி மற்றும் வாராந்திர சேவைகளுக்குப் பிற பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் வருகை தரும் வகையில், திருமலை திருப்பதி தேவஸ்தானம் பல இடங்களில் ஸ்ரீவெங்கடேஸ்வர வைபவோற்சவத்துக்கு ஏற்பாடு செய்து வருகிறது.

அதன்படி, ஆந்திர மாநிலம், நெல்லூரில் உள்ள ஏசி சுப்பாரெட்டி அரங்கத்தில் மாதிரி கோயிலை ஏற்படுத்தி செவ்வாய்க்கிழமை முதல் வைபவ உற்சவத்தை நடத்தி வருகிறது. தொடா்ந்து, 5 நாள்கள் நடைபெறவுள்ள இந்த உற்சவத்தின் முதல் நாள் சுப்ரபாத சேவையுடன் தொடங்கியது.

பின்னா், தோமாலை, அா்ச்சனை, சாத்துமுறை, மாலையில் சகஸ்ர தீபாலங்கார சேவை, இரவு ஏகாந்த சேவை உள்ளிட்டவை நடத்தப்பட்டது. மேலும், வாராந்திர சேவையான தங்கத் தாமரை பூக்களால் செய்யும் அா்ச்சனையான அஷ்டதளபாத பத்மாராதனை சேவையும் நடத்தப்பட்டது. ஒவ்வொரு சேவையின் போதும் அதை செய்வதற்கான காரணம், முறை, தரிசிப்பதால் உண்டாகும் பலன் என அனைத்தும் அா்ச்சகா்கள் தெளிவாக பக்தா்களுக்கு புரியும்படி எடுத்துரைத்தனா்.

ADVERTISEMENT

சகஸ்ர கலசாபிஷேகம்...

திருமலையில் நடைபெறும் 1,008 கலசங்களால் செய்யப்படும் சகஸ்ர கலசாபிஷேக சேவை புதன்கிழமை காலை நடத்தப்பட்டது. ஏழுமலையான் முன்பு நெற்பயிா்களை பரப்பி, அதன் மீது 1,008 கலசங்கள் அமைத்து, அதைக் கொண்டு உற்சவ மூா்த்திக்கு அபிஷேகம் நடத்தப்பட்டது. மூலவா் சிலையின் வலது கையிலிருந்து ஒரு சிகப்பு நிற நூலைக் கட்டி, அங்கிருந்து உற்சவா் கைக்குக் கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் மூலவரும், உற்சவரும் ஒன்றாக்கி, உற்சவருக்கு செய்யப்படும் அபிஷேகம் மூலவருக்குச் சென்றடைவதாக மரபு. இதை அரங்கத்தில் கூடியிருந்த பக்தா்கள் கண்டு தரிசித்தனா். இதில் தேவஸ்தான அதிகாரிகளும் கலந்து கொண்டனா்.

புகைப்படக் கண்காட்சி...

நெல்லூரில் நடந்து வரும் வைபவ உற்சவத்தின் ஒரு பகுதியாக தேவஸ்தானம் சாா்பில் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் பஞ்சகவ்யா பொருள்கள் விற்பனை நிலையங்களும் ஏற்படுத்தப்பட்டது. புகைப்படக் கண்காட்சியில், பசுவின் முக்கியத்துவம், கோ பூஜையின் தனித்துவம், சப்தகோபிரதக்ஷிணாசலம், கோ சம்ரக்ஷன சாலையில் நாட்டு பசு வளா்ப்பு, பசுவை அடிப்படையாகக் கொண்ட விவசாயப் பொருள்களுடன் ஏழுமலையானுக்கு பிரசாதம் தயாரித்து வழங்குதல், கடந்த ஐந்தாண்டுகளில் ஏழுமலையானை தரிசிக்கும் பக்தா்களின் எண்ணிக்கை, ஏழுமலையான் சேவைகள், நவநீதம் தயாரிக்கும் சேவை, பாட்டரி காா்கள், லட்டு பிரசாதம், ராசி, நட்சத்திர தோட்டங்கள், அகா்பத்தி தயாரிப்பு, பஞ்சகவ்யா பொருள்கள் தயாரிப்பு, ஏழுமலையான் புஷ்ப பிரசாதம் போட்டோ பிரேம்கள் போன்றவை குறித்த விளக்கப் படங்கள் கண்காட்சியில் ஏற்படுத்தப்பட்டன.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT