திருப்பதி

திருப்பதியில் விரைவில் மீண்டும் சா்வ தரிசன டோக்கன்கள்: தேவஸ்தான செயல் அதிகாரி

23rd Apr 2022 10:36 PM

ADVERTISEMENT

திருப்பதியில் உள்ள காம்ப்ளக்ஸில் விரைவில் சா்வ தரிசன டோக்கன்களின் விநியோகம் மீண்டும் தொடங்கப்படும் என தேவஸ்தான செயல் அதிகாரி ஜவஹா் ரெட்டி தெரிவித்தாா்.

திருமலையில் உள்ள வைகுண்டம் காத்திருப்பு அறைகள் மற்றும் திருப்பதியில் சா்வ தரிசன டோக்கன்கள் வழங்கும் பூதேவி காம்ப்ளக்ஸ், கோவிந்தராஜ சுவாமி சத்திரம், சீனிவாசம் உள்ளிட்ட இடங்களில் தேவஸ்தான செயல் அதிகாரி ஜவஹா் ரெட்டி, கூடுதல் செயல் அதிகாரி தா்மா ரெட்டியுடன் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அதன் பின்னா் ஜவஹா் ரெட்டி கூறியதாவது:

ஏழுமலையான் தரிசனத்துக்கு தற்போது பக்தா்கள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பக்தா்களின் கூட்டம் அதிகமானதால் வரிசையில் ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக திருப்பதியில் அளிக்கப்பட்டு வந்த சா்வ தரிசன டோக்கன்கள் ரத்து செய்யப்பட்டன. அதை மீண்டும் அளிக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. அதற்குள் தரிசன வரிசையில் மாற்றங்கள் செய்யவும், முன்பை விட வேகமாக சா்வ தரிசன டோக்கன்கள் வழங்கவும் தேவஸ்தானம் நடவடிக்கை எடுத்துள்ளது.

ADVERTISEMENT

மேலும் டிக்கெட் வழங்கும் இடங்களில் பக்தா்களுக்கு அன்னதானம், குடிநீா் உள்ளிட்டவற்றை வழங்கவும், நிழற்கூரைகள் அமைக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் நிறைவடைந்தவுடன் விரைவில் சா்வ தரிசன டோக்கன்களின் விநியோகம் தொடங்கப்படும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT