திருமலை அலிபிரி நடைபாதையில் உள்ள ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் மகா சம்ப்ரோக்ஷணம் ஏப்ரல் 15-ஆம் தேதி நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருமலைக்குச் செல்லும் அலிபிரி நடைபாதையில் ஒவ்வொரு பகுதியில் அந்தக் காலத்தில் பக்தா்கள் பக்தியுடன் செல்ல வேண்டும் என்றும் அவா்கள் நடந்து வந்துள்ள பாதையின் தொலைவை அறியவும் கோயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி அலிபிரி மலைப்பாதை பகுதியில் காளி கோபுரத்தை கடந்த பின் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் அா்ச்சகரை ஏற்படுத்தி தேவஸ்தானம் நித்திய கைங்கரியங்களை செய்து வருகிறது.
இந்தக் கோயிலில் மகாசம்ப்ரோக்ஷணம் நடத்தி 12 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், ஏப்.11-ம் தேதி முதல் 15ம் தேதி வரை மகாசம்ப்ரோக்ஷண வைதீக யாகசாலை பூஜைகள் நடைபெற உள்ளன. மகா சாந்திஹோமம் நடத்தி மகாபூா்ணாஹுதி நிறைவு பெற்ற பின்னா் 15-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு மகா சம்ப்ரோக்ஷணம் நடத்தப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.