திருப்பதி

திருமலை ஏழுமலையான் கோயிலில் யுகாதி ஆஸ்தானம்

2nd Apr 2022 10:11 PM

ADVERTISEMENT

திருமலை ஏழுமலையான் கோயிலில் தெலுங்கு வருட பிறப்பான யுகாதி பண்டிகையை முன்னிட்டு, ஆஸ்தானம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

திருமலை ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் தெலுங்கு வருடப் பிறப்பு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, சனிக்கிழமை சுபகிருதி தெலுங்கு வருட புத்தாண்டு தொடங்கியதால், அன்று காலை கோயிலில் ஆஸ்தானம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதிகாலை சுப்ரபாதம், தோமாலை, அா்ச்சனை உள்ளிட்ட சேவைகளுக்குப் பின்பு, உற்சவ மூா்த்திகளான ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப ஸ்வாமியை சா்வபூபால வாகனத்தில் தங்கவாசல் அருகில் எழுந்தருளச் செய்து, அவா்களுக்கு தீப, தூப ஆராதனைகள், பட்டு வஸ்திரம் உள்ளிட்டவை சமா்ப்பிக்கப்பட்டன.

பின்பு, சுபகிருதி ஆண்டின் பஞ்சாங்கம் படிக்கப்பட்டது. அதன் பின்னா், நெய்வேத்தியம் சமா்ப்பித்து, உற்சவ மூா்த்திகளுக்கு ஆரத்தி அளிக்கப்பட்டது.

கோயிலுக்குள் நடந்த இந்த நிகழ்ச்சியில் திருமலை ஜீயா்கள், தேவஸ்தான அதிகாரிகள் மட்டுமே கலந்து கொண்டனா். திருமலை ஜீயா்கள் மற்றும் தேவஸ்தான அதிகாரிகள் இந்த சுபகிருதி ஆண்டு அனைவருக்கும் வளத்தையும், நலத்தையும் அருள வேண்டும் என பக்தா்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

விழாவை முன்னிட்டு, கோயில் மற்றும் மாடவீதிகள் அனைத்து மலா்கள் மற்றும் மின்விளக்குகளால் அழகுற அலங்கரிக்கப்பட்டது. புத்தாண்டின் பெருமைகளை விளக்கும் வகையில், அலங்காரத்தில் மாங்காய், வேப்பம் பூ, புளியங்காய் உள்ளிட்டவை வைக்கப்பட்டன.

பல கனி வகைகளும் அலங்காரத்தில் பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்குச் சொந்தமான அனைத்துக் கோயில்களிலும் தெலுங்கு வருடப் பிறப்பை முன்னிட்டு, ஆஸ்தானம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

தொடக்கம்...

திருமலையில் உள்ள சங்குமிட்ட பகுதியில் உள்ள ஜெகன்நாத விருந்தினா் மாளிகை பழுதடைந்ததால், தேவஸ்தானம் அவற்றை செப்பனிட்டு சனிக்கிழமை காலை பூஜைகள் செய்து, அதை பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தது. ஹைதராபாதைச் சோ்ந்த பிரமோத் குமாா் அகா்வால் என்ற நன்கொடையாளா் செப்பனிடும் பணிகள் முழுவதையும் ஏற்றுக் கொண்டாா்.

இந்த விருந்தினா் மாளிகையை தேவஸ்தான அறங்காவலா் குழுத் தலைவா் சுப்பா ரெட்டி பூஜைகள் செய்து, பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தாா். இதில் தேவஸ்தான அதிகாரிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT