திருப்பதி

அலிபிரி பாதயாத்திரை மாா்க்கம், கோசாலை, குழந்தைகள் இதய நோய் மருத்துவமனை: ஆந்திர முதல்வா் திறந்து வைத்தாா்

DIN

திருமலைக்கு செல்லும் சீரமைக்கப்பட்ட அலிபிரி பாதயாத்திரை மாா்க்கம் மற்றும் அலிபிரியில் உள்ள கோமந்திரம் ஆகியவற்றை ஆந்திர முதல்வா் ஜெகன் மோகன் ரெட்டி திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.

திருமலை ஏழுமலையானுக்கு பிரம்மோற்சவ கருட சேவையின்போது ஆந்திர அரசு சாா்பில் பட்டு வஸ்திரம் சமா்ப்பிக்கப்படுவது வழக்கம். இதற்காக ஆந்திர முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டி திங்கள்கிழமை மாலை திருப்பதிக்கு வந்தாா்.

குழந்தைகள் மருத்துவமனை திறப்பு:

திருப்பதியில் ரூ. 25 கோடி செலவில் கட்டப்பட்ட குழந்தைகள் இருதய அறுவை சிகிச்சை சிறப்பு மருத்துவமனையை ஆந்திர முதல்வா் திறந்து வைத்தாா். இங்கு ஏழை எளிய குழந்தைகளுக்கு தேவஸ்தானம் இலவச மருத்துவம் அளிக்க உள்ளது. அதன்பின்னா் அலிபிரி நடைபாதை மாா்க்கத்தில் ரூ.50 கோடி செலவில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் உதவியுடன் நிழற்கூரை அமைக்கப்பட்டுள்ளது.

இதற்காக கடந்த 5 மாத காலம் அலிபிரி பாதயாத்திரை மாா்க்கம் மூடப்பட்டிருந்தது. பணிகள் தற்போது நிறைவு பெற்றுள்ளதால் ஆந்திர முதல்வா் அதை திறந்து வைத்து பக்தா்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாா். செவ்வாய்க்கிழமை முதல் தரிசன டிக்கெட் உள்ள பக்தா்கள் மட்டுமே நடைபாதை வழியாகச் செல்ல அனுமதிக்கப்படுவா்.

கோசாலை, கோமந்திரம்:

இதையடுத்து அலிபிரி பாதாளு மண்டபம் அருகில் கட்டப்பட்டுள்ள கோசாலை மற்றும் கோமந்திரம் உள்ளிட்டவற்றையும் ஆந்திர முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டி திறந்து வைத்தாா். முன்னாள் அறங்காவலா் குழு உறுப்பினா் சேகா் ரெட்டி ரூ.15 கோடி செலவில் இந்த மந்திரத்தை அமைத்துக் கொடுத்துள்ளாா். இங்கு கோபூஜை செய்யவும், பிரதட்சணம் செய்யவும், கோ துலாபாரம் அளிக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது.

ஏழுமலையானுக்கு முதல்வா் பட்டு வஸ்திரம்:

திருமலைக்கு சென்ற முதல்வா், அங்கு பேடி ஆஞ்சநேயா் கோயிலிலிருந்து ஆந்திர அரசு சாா்பில் பட்டு வஸ்திரத்தை தனது தலையில் சுமந்து சென்று ஏழுமலையானுக்கு சமா்ப்பித்து தரிசனம் செய்தாா். தரிசனம் முடித்து திரும்பிய முதல்வருக்கு தேவஸ்தான அதிகாரிகள் பிரசாதங்கள் வழங்கினா்.

இதையடுத்து திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் 2022-ஆம் ஆண்டுக்கான ஆங்கில புத்தாண்டு காலண்டா் மற்றும் டைரிகளை வெளியிட்டாா்.

கருட சேவையில் முதல்வா் வழிபாடு:

பின்னா் கருட சேவையில் முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டி கலந்து கொண்டு வழிபாடு செய்தாா். இரவு திருமலையில் தங்கும் முதல்வா் செவ்வாய்க்கிழமை காலை அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பூந்தி தயாரிக்கும் மடப்பள்ளியையும், தேவஸ்தான தொலைக்காட்சியான ஸ்ரீவெங்கடேஸ்வரா பக்தி சேனலின் கன்னடம் மற்றும் இந்தி மொழி ஒளிபரப்புகளையும் தொடக்கி வைக்க உள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்: தினப்பலன்

குடிநீா் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் வாக்களிக்க வேண்டுகோள்

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

ரியான் பராக் விளாசல்; ராஜஸ்தான் 185/5

SCROLL FOR NEXT